பெட்ரோல் ஊற்றி காதலியை உயிரோடு எரித்துகொன்ற காதலன்: திருப்பூரில் பயங்கரம்

பல்லடம்; திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பனப்பாளையம் பகுதியில் பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள காட்டு பகுதியில் இருந்து நேற்று மாலை உடலில் தீ காயங்களுடன் ஒரு இளம்பெண் அலறியபடி பிரதான சாலைக்கு ஓடி வந்தார். அவ்வழியே சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பெண்ணை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பெண்ணுக்கு தீ வைத்து விட்டு மோட்டார் பைக்கில் தப்பி செல்ல முயன்றபோது அந்த இளைஞர் தவறி விழுந்து காயம் அடைந்தார். அவரையும் பிடித்து அப்பகுதியினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்பெண்ணுக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாவது: வடமாநிலத்தைச் சேர்ந்த பூஜா (19) என்ற பெண் பல்லடம் ராயர்பாளையம் பகுதியில் அவரது உறவினர் இப்ராகிம் என்பவர் வீட்டில் தங்கி கொண்டு, அருகே உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். வேலைக்கு சென்ற இடத்தில் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரது மகன் லோகேஷ் (22), என்பவருடன் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பூஜா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி லோகேஷை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இருவரும் பல்லடம் பனப்பாளையம் பெத்தாம்பாளையம் சாலையில், சந்தித்து பேசி கொண்டிருந்துள்ளனர். அப்போதும் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் ஆத்திரம் அடைந்த லோகேஷ் மோட்டார் பைக்கில் வைத்திருந்த பெட்ரோலை, பூஜா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் அலறி துடித்து பிரதான சாலைக்கு ஓடி வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

பைக்கிலிருந்து விழுந்து காயமடைந்த லோகேஷ் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய பூஜாவை மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து லோகேஷை கைது செய்தனர்.

Related Stories: