மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டத்தில் உலக பிரசித்திபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் நடைபெற உள்ளன. பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை மாவட்ட உதவி ஆட்சியர் திவ்யான்ஷு நிகம் நேரில் ஆய்வு செய்தார். வாடிவாசல் பகுதி, காளைகள் ஒன்று சேரும் இடம், வடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் ஒருங்கிணையும் இடம், மாடுபிடி வீரர்களுக்கு உடல்பரிசோதனை நடக்கும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.
அவனியாபுரம் ஜல்லிகட்டுப்போட்டியை கிராம மக்களே நடத்துவது தொடர்பாக கிராம கமிட்டி சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் தை பொங்கல் நாளில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் இதனை நடத்துவது தொடர்பாக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் அவனியாபுரம் கிராம கமிட்டி இடையே கருத்து ஏற்பாடு ஏற்பட்டுள்ளதால்.
கடந்த 2 வருடங்களாக ஜல்லிக்கட்டு விழாவை தமிழ்நாடு அரசே நடத்தியது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் முன்பு நடைபெற்ற அமைதி கூட்டத்தில் எந்த வித முடிவும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த புள்ளி கோரி அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது.