×

வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் கோயிலில் 11 நாளில் 7.12 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருச்சி: வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த 11 நாளில் 7.12 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 22ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன்பின் பகல்பத்து உற்சவம் 23ம் தேதி தொடங்கி 1ம் தேதி வரை நடந்தது. ஜனவரி 1ம் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி அளித்தார். மறுநாள் 2ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

ராப்பத்து உற்சவத்தின் 3ம் நாளான நேற்று நம்பெருமாள் சவுரிக்கொண்டை, ரத்தின லட்சுமி பதக்கம், வைர அபயஹஸ்தம், ரத்தின காதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து பகல் 11 மணிக்கு புறப்பட்டார். பகல் 12 மணி அளவில் நம்பெருமாள் பக்தர்களுடன் பரமபதவாசல் வழியாக சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ராப்பத்து உற்சவ மண்டபமான திருமாமணி மண்டபத்தில் மதியம் 2 மணிக்கு எழுந்தருளினார்.

அதன்பின் மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பரமபதவாசல் பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டிருந்தது. கடந்த 2ம் தேதி மட்டும் சொர்க்கவாசலை 2,16,034 பேர் கடந்து சென்றனர். அதுபோல் மோகினி அலங்காரத்தை 81,754 பேர் தரிசனம் செய்தனர். கடந்த 23ம் தேதி முதல் 2ம் தேதி வரை ஸ்ரீரங்கம் நம்பெருமாளை 7,12,031 பேர் தரிசனம் செய்துள்ளனர்.

Tags : Vaikunta Ekadasi Festival ,Sriangam Temple , Vaikunda Ekadasi Festival: 7.12 Lakh Devotees Visit Srirangam Temple in 11 Days
× RELATED திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கோபுர...