×

நீலகிரியில் பன்றி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் பன்றிகளை விற்பனைக்காக வெளியே எடுத்துச்செல்ல தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நீலகிரி: நீலகிரியில் பன்றி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் பன்றிகளை விற்பனைக்காக வெளியே எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் காட்டு பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உயிரிழந்த காட்டுப் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இறந்த பன்றிகளின் உடல் மாதிரிகளை கால்நடை மருத்துவர்கள் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்த நிலையில், தற்போது காட்டுப் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முதுமலை யானைகள் முகாமுக்கு காட்டுப் பன்றிகள் வராமல் இருப்பதற்கு பாரம்பரிய முறைப்படி பழைய சேலைகளை கட்டி தடுப்பு நடவடிக்கைகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நீலகிரியில் பன்றி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் பன்றிகளை விற்பனைக்காக வெளியே எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீறினால் பன்றி உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். கால்நடை மருத்துவக் குழு நாள்தோறும் பண்ணைகளை கண்காணித்து வருவதாக ஆட்சியர் அம்ரித் தகவல் தெரிவித்துள்ளார். காட்டுப்பன்றிகள் பண்ணையில் நுழையாதவாறு நடவடிக்கை எடுக்க உரிமையாளர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் பன்றிகளை மட்டுமே தாக்கும்; மற்ற விலங்குகளுக்கோ, மனிதர்களுக்கோ பரவாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nilgiris ,Ruler , Nilgiris, Pig Breeding, Sales, District Collector
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...