ஹெச். 1பி, ஈ.பி.-5 விசா விண்ணப்பங்களுக்கான கட்டணங்களை பன்மடங்கு உயர்த்திய அமெரிக்கா: வேலை வாய்ப்புகளை நாடும் பலரும் அதிர்ச்சி..!!

வாஷிங்டன்: ஹெச். 1பி, ஈ.பி.-5 விசா விண்ணப்பங்களுக்கான கட்டணங்களை அமெரிக்கா பன்மடங்கு உயர்த்தியுள்ளது. கட்டண உயர்வால் அமெரிக்க வேலைகளை நாடும் பலரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சார்ந்து வழங்கப்படும் விசாக்களுக்கான கட்டணங்களை உயர்த்த அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை பரிந்துரைத்துள்ளது. இதன்படி ஹெச். 1பி விசாக்களுக்கான ஆன்லைன் பதிவு கட்டணம் 827 ரூபாயில் இருந்து 17,779 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஹெச். 1பி விசாக்களுக்கான விண்ணப்ப கட்டணம் 38 ஆயிரம் ரூபாயில் இருந்து 64,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

நிறுவன மாறுதலுக்கான எல் விசா விண்ணப்பத்திற்கு 38 ஆயிரம் ரூபாயாக இருந்த கட்டணம் 1 லட்சத்து 14 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலீடுகள் சார்ந்து வழங்கப்படும் கிரீன் கார்டான ஈ.பி.-5 விசாக்களை பெற இதுவரை 3 லட்சம் கட்டணமாக இருந்த நிலையில், தற்போது 9 லட்சம் ரூபாய்க்கு மேல் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிரந்தர குடியுரிமை நிலைக்கான நிபந்தனைகளை நீக்குவதற்கான ஈ.பி.-5 விசாக்களுக்கு 3 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயாக இருந்த கட்டணம், 7 லட்சத்து 87 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அங்கீகாரத்திற்கான ஆன்லைன் விண்ணப்பம், ஆவணங்கள் தாக்கல் கிரீன் கார்டு நிலைகளை மாற்றுவது, குடியுரிமை விண்ணப்பம் ஆகியவற்றிற்கான கட்டணங்களும் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் கருத்து கூற 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த சில மாதங்களில் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வரலாம். இது அமெரிக்க வேலைகளை நாடும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: