×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்கு குவிந்த செம்பு, பித்தளை பாத்திரங்கள்: கரும்பு விற்பனையும் தொடங்கியது

நாகர்கோவில்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட்டில் செம்பு, பித்தளை பாத்திரங்கள், அப்டா மார்க்கெட்டில் கரும்பு கட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டவில்லை. இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. வரும் 14ம் தேதி (சனிக்கிழமை) போகிப்பண்டிகையுடன் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் தொடங்குகிறது. 15ம் தேதி  பொங்கல் பண்டிகை, 16ம் தேதி  மாட்டு பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம், 17ம் தேதி (செவ்வாய்கிழமை) உழவர் திருநாள் என்று பொங்கல் கொண்டாடப்படுகிறது.

 இதற்காக வெளியூர்களிலும், வெளி மாநிலங்களிலும் பணியாற்றுகின்றவர்கள் சொந்த ஊருக்கு வருகை தர பஸ், ரயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் குமரி மாவட்டத்தில் இப்போதே தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்பு, மஞ்சள் குலை, கிழங்கு வகைகள் ஆகியவற்றின் விற்பனை தீவிரமாக நடைபெறும். கிழங்கு வைககளும் விற்பனைக்கு கொண்டுவரப்படும். அந்த வகையில் தற்போது மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து பொங்கல் கரும்புகள் விற்பனைக்கு  குவிந்துள்ளன. நாகர்கோவில் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட்டில் லாரிகளில் கரும்புகள் நேற்று வந்து சேர்ந்துள்ளது. 15 எண்ணிக்கை கொண்ட கரும்பு கட்டு ஒன்று ரூ.450 முதல் ரூ.550 வரை விற்பனை செய்யப்படுகிறது.

 மேலும் தனிக்கரும்பு ஒன்று ரூ.40, ரூ.50 என்று விற்பனை செய்யப்படுகிறது. முதல்கட்டமாக சிறு வியாபாரிகள் கரும்பு கட்டுகளை வாங்கி செல்கின்றனர். வரும் 10ம் தேதி மேலும் கரும்பு கட்டுகள்  வர இருக்கின்றன என்றும், அதன் பிறகே இறுதி விலை நிர்ணயம் இருக்கும் என்றும் வியாபாரி ஒருவர் தெரிவித்தார். பொங்கல் பண்டிகையொட்டி புதுமண தம்பதியருக்கு தலைப்பொங்கல் சீர்வரிசை வழங்கும் வழக்கம்  இருந்து வருகிறது. இதில் புதுமண தம்பதியருக்கு புத்தாடைகள், தங்க நகைகள், சீர்வரிசை பொருட்கள் மட்டுமின்றி பொங்கல் பண்டிகை கொண்டாட குத்துவிளக்கு, செம்பு பானை, உருண்டை பானை, நாழி, உழக்கு, குத்துப்போணி, பூஜை பொருட்களான மணி, பத்தி ஸ்டாண்ட், காமாட்சி விளக்கு, தூபக்கால் போன்றவற்றையும், கரும்பு, மஞ்சள், வாழைத்தார் போன்றவற்றையும் வழங்குவது வழக்கம். அந்த வகையில் நாகர்கோவில் கோட்டார், மீனாட்சிபுரம் பகுதிகளில் பாத்திரக்கடைகளில் செம்புபானை கிலோ ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. பித்தளை பானைகள் கிலோ ரூ.900 வரையிலும், விளக்கு ரூ.750 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

பாத்திர வகைகள், கும்பகோணம், திருநெல்வேலி பகுதிகளில் இருந்து வந்து குவிந்துள்ளன. மேலும் உள்ளூரிலும் பாத்திர வகைகள் தயார் செய்யப்பட்டு அதுவும் விற்பனைக்கு வருகிறது. இதனை போன்று எவர்சில்வர் பாத்திர வகைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. பொங்கல் பண்டிகைக்கு 10 நாட்களே உள்ள நிலையில் பொங்கல் சீர்வரிசை பாத்திர வகைகளை வாங்கிட மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். இதனால் பாத்திர கடைகள், வீதிகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. மக்கள் குடும்பம், குடும்பமாக வருகை தந்து பாத்திர வகைகளை வாங்கி செல்கின்றனர். பாத்திர கடைகளில் சிலவற்றில் பொங்கல் பாத்திர வகைகள் செட் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை என்று மொத்தமாக விலை நிர்ணயம் செய்தும் விற்பனை நடைபெறுகிறது. மேலும் நாகர்கோவில் வடசேரி பகுதியில்  மண் அடுப்பு, மண் சட்டி, பானை வகைகள் விற்பனையும் நடைபெறுகிறது. ரூ.60 முதல் ரூ.160 வரை மண் பானை வகைகளுக்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கின்றனர்.

Tags : Pongal Festival , Copper and brass utensils for sale on the eve of Pongal: Sugarcane sales have also started
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா