வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் ஏமாற்றிய வாலிபர் அதிரடி கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியத்தில், வீடு வாங்கி தருவதாக கூறி, ரூ.10 லட்சம் ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை புளியந்தோப்பு திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (38). இவர், துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு பிரான்சிஸ் புளியந்தோப்பு பகுதியில் கட்டப்பட்டு வந்த கேபி பார்க் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கூறிய புளியந்தோப்பு நரசிம்ம நகர் 4வது தெருவை சேர்ந்த அகஸ்டின் (38) என்பவரிடம் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். நீண்ட நாட்கள் ஆகியும் சிஸ்க்கு வீடு வழங்கப்படவில்லை.

மேலும், குறிப்பிட அந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், பிரான்சிஸ்க்கு எந்த வீடும் வராததால் சந்தேகமடைந்த பிரான்சிஸ் தனது பணத்தை திருப்பி கேட்டார். இதனையடுத்து கடந்த 2021ம் ஆண்டு வரை சிறுக, சிறுக அகஸ்டின் ரூ.4 லட்சத்தை திருப்பி கொடுத்துள்ளார். மீதி ரூ.6 லட்சத்தை கேட்டபோதெல்லாம் பணம் தருகிறேன் எனக்கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து பிரான்சிஸ் பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த பேசின்பிரிட்ஜ் குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் அவரது வீட்டில் வைத்து அகஸ்டினை கைது செய்தனர். கைது செய்த அகஸ்டின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: