×

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி சேவை மையம்: அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்

சென்னை: பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோயில்கள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையிலும், நிறை, குறைகளை தெரிவிக்கும் வகையிலும் கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோயில்கள் தொடர்பான குறைகளை இணையவழியாக பதிவு செய்திட ஏதுவாக இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் “குறைகளை பதிவிடுக” எனும் வசதியும், 044 - 28339999 என்ற எண்ணில் தொலைபேசி வாயிலாகவும் தெரிவிக்கும் வகையில் குறை கேட்பு மையம் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உதவி மையத்தின் செயல்பாட்டினை விரிவுபடுத்திடும் வகையிலும், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோயில்கள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையிலும், நிறை குறைகளை தெரிவிக்கும் வகையிலும் 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் சேவையையும், 24 மணி நேர உதவி மையத்தின் சேவையினையும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

இம்மையத்தில் பெறப்படும் கோரிக்கை விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, உரிய தீர்வு மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படுவதோடு, மனுதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் ஒப்புகையும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் சந்தரமோகன், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர்,
தற்சமயம் பக்தர்களிடமிருந்து வரப்பெறும் ஆலோசனைகள் மற்றும் புகார்களை ஏற்று ஒரே நேரத்தில் பதிலளிப்பதற்கு 5 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயிலை பொறுத்தளவில், துறை எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியையும் மிக அழுத்தமாகவும் அதே நேரத்தில் உறுதியான நடவடிக்கைகளாக எடுத்து வருகிறோம். கோயிலை கையகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இந்த அரசுக்கு இல்லை.  குறைகளைக் களைந்து,

காஞ்சிபுரம் மாவட்டம், அய்யன்குளத்தில் அமைந்துள்ள பழமையான சஞ்சீவிராயர் கோயிலை புனரமைப்பதற்கு அறிக்கை பெறப்பட்டு திருப்பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை 281 சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன, கடத்தப்பட்டு வெளிநாட்டுகளில் இருக்கின்ற 161 சிலைகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சிலைகளுக்கு இப்பொழுது மீட்கப்பட்டிருக்கின்ற சிலைகளுக்கு அதிநவீன தொழில்நுட்பத்தோடு ஒரு சிறப்பு குறியீடு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Hindu Religious Charities ,Minister ,Shekhar Babu , Department of Hindu Religious Charities, Toll Free Telephone Service Centre, Minister Shekhar Babu
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...