தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியிடம் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தல்; கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தல்

சென்னை: டெல்லியில் ஒன்றிய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடித்திடவும், ஒப்பந்தம் முடிந்த சுங்கச்சாவடிகளை அகற்றிடக் கோரியும் தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கடிதம் வழங்கினார். பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள பணிகளான தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு உயர்மட்ட சாலை, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. இதை விரைவுபடு்த வேண்டும். செங்கல்பட்டிலிருந்து திண்டிவனம் 8 வழி சாலையாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஸ்ரீபெரும்புதூர் முதல் பூந்தமல்லி வரை, மாதவரத்திலும் உயர்மட்ட சாலைகள் அமைக்க வேண்டும் என்றும் ஏற்கனவே கடிதம் வழங்கப்பட்டிருந்தது.

அதுவும் இந்தாண்டே பணிகளை துவங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கப்பலூர், கிருஷ்ணகிரியில் ஏற்கனவே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது, அது நகரப்பகுதியில் அமைந்திருக்கிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி நகர்புறத்தில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. அதை அகற்றவது குறித்து ஒன்றிய அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கான உடனடியாக மாற்றி வழியை அமைத்து தருவதாக உத்தரவு அளித்துள்ளார். சேலம் உளுந்தூர்பேட்டை சாலை என்பது பல இடங்களில் 4 வழிச்சாலையாகவும், சில இடங்களில் 2 வழிச்சாலையாகவும், அதில் குறிப்பாக 8 இடங்களில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

சேலம் முதல் உளுந்தூர்பேட்டை சாலைகளில் 8 இடங்களில் பழுதடைந்து உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களை அழைத்து வேறொரு ஒப்பந்ததாரரை நியமித்து அந்த பணிகளை எல்லாம் உடனடியாக தொடங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். மேலும், தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என்ற அடிப்படையில்தான், இந்த சந்திப்பானது நடைபெற்றது. அனைத்து கருத்துகளை ஒன்றிய அமைச்சரிடம் கடிதமாக வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் இந்த ஆண்டே விரைந்து முடித்திட துறையின் சார்பாக முயற்சி செய்வதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Related Stories: