×

குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கேட்டதால் ஆத்திரம் நிருபர்களை மிரட்டினார் பாஜ அண்ணாமலை: அடிக்க பாய்ந்த கட்சியினரால் கமலாலயத்தில் பரபரப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை முன்னிலையில், 16 அமைப்புகளை சேர்ந்தவர்கள் பாஜவில் இணையும் நிகழ்ச்சி கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பாஜ தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, திருப்பூர் பெண் கோவையில் மரணம் குறித்து அண்ணாமலை கூறினார். அது தொடர்பான கேள்விகளை நிருபர்கள் எழுப்பினர். இதனால் அண்ணாமலைக்கும், நிருபர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அண்ணாமலை அளித்த பதிலுக்கு, நிருபர் ஒருவர் ‘ஒவ்வொரு முறையும் நீங்கள் குற்றச்சாட்டு வைக்கிறீர்கள். ஆனால் ஆதாரத்தை தர மறுப்பது ஏன்?’ என்று பதிலுக்கு கேள்வி கேட்டார். இந்த கேள்வியால், ஆவேசமான அண்ணாமலை, சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் மீது பாய்ந்தார். இதனால் நிருபர்களுக்கும், அண்ணாமலைக்கும் கடுமையான மோதல் வார்த்தை உருவானது.

தொலைக்காட்சியில் போட்டால் நான் என்ன பயந்து விடுவேனா. இந்த வேலையை எல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர் என்று மிரட்டும் தொனியில் பேசினார். இதை பார்த்த அங்கிருந்த பாஜவினர் மோதலை தடுக்கவும் முடியாமல். கட்சி தலைவரே நிருபர்களுடன் மோதலில் ஈடுபடுவதை பார்த்து, என்ன செய்வதென தெரியாமல் விழிபிதுங்கி நின்று கொண்டிருந்தனர். அப்போது, அண்ணாமலையின் கோபம் அங்கு கேள்வி கேட்ட யூடியூப் நிருபர் ஒருவர் மீது திரும்பியது. ‘‘40 ஆயிரம் ரூபாய் கேமரா, மொபைல் போன் வைத்துக் கொண்டு லைக் வாங்குவதற்காக யூடியூப் சேனல்காரர்கள் கேள்வி கேட்கிறீர்கள். எனது பெயர் அண்ணாமலை. நான் பாஜக, அதே மாதிரி என்னிடம் கேள்வி கேட்பவர்கள் யாராக இருந்தாலும் பத்திரிக்கையாளர் என சொல்ல கூடாது. சேனல் பெயரையும் நிருபர் பெயரையும் கூறி விட்டு கேள்வி கேளுங்கள்’’ என்று கொந்தளித்தார்.

மேலும், ‘‘என்னுடைய செய்தியை போடுங்கள் என்று நான் யார் காலிலும் விழவில்லை. இனிமேல் யூடியூப் சேனல் நடத்துபவர்கள் பாஜ அலுவலகத்திற்கு செய்தி சேகரிக்க வர வேண்டாம். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்’’ என்றும் அண்ணாமலை தெரிவித்தார். இப்படி பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலையின் கோபம் நொடிக்கு நொடி அதிகரித்து, ஒரு கட்டத்தில் தன் நிலை மறந்து நிருபர்களை மிகவும் கீழ்த்தரமாக ஒருமையில் பேசியது அனைத்தும் தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பானது.

இந்த கொந்தளிப்பு சூழ்நிலையை தொடர்ந்து, அரை மணி நேரம் கழித்து பத்திரிகையாளர்களிடம், அண்ணாமலை ஒரு பைலை கொடுத்து நீங்கள் கேட்ட ஆதாரம் இதில் இருக்கிறது. இதை வைத்து செய்தி வெளியிட தைரியம் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். இதையடுத்து, நீங்கள் நேரடியாக விவாதத்திற்கு வாருங்கள் என்று பத்திரிகையாளர்கள் அழைத்துள்ளனர். ஆனால் என்னையே விவாதத்திற்கு அழைக்கிறீர்களா. எனக்கு பதில் நாராயணன் திருப்பதி தான் விவாதத்தில் வந்து பேசுவார் என்று அண்ணாமலை கூறியதாகவும், மிரட்டும் தொனியில் அண்ணாமலை பேசியதாகவும் பத்திரிகையாளர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். நீங்கள் குற்றச்சாட்டு கூறும் நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி அது குறித்து சவால் விட்டுள்ளார்.

இது அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் அப்போது கூட்டணியில் உள்ள கட்சி என்பதால் வாய் திறக்காமல் இப்போது பேசுவது ஏன் என்று கேள்விகளை கேட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், அண்ணாமலை ரூமிற்குள் சென்று நடந்தவை குறித்து விளக்கமளிக்க பத்திரிகையாளர்கள் சென்ற போது, அவரது செருப்பை வெளியே கழற்றி வைத்துவிட்டு உள்ளே வருமாறு அண்ணாமலை ஆபீசிலிருந்த ஒரு சிலர் தடித்த குரலில் பேசும் காட்சி வெளியாகியுள்ளது.

அண்ணாமலையுடன் இருக்கும் பாஜகவினர் சில பத்திரிகையாளர்களை வெளியில் செல்லுமாறு மிரட்டுவதும், அப்போது உள்ளே புகுந்த நாராயணன் திருப்பதி உள்ளிட்ட சில நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை அடிக்க பாய்வது போன்ற காட்சிகளும் உள்ளது. அப்போது கட்சியினர் சிலர் பத்திரிகையாளர்களை அண்ணாமலை அறையில் இருந்து வெளியில் தள்ளுகின்றனர். அப்போது பத்திரிகையாளர்கள், நீங்கள் அழைத்ததால் தான் இங்கு வந்தோம். நீங்கள் தான் மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

அதை பொருட்படுத்தாமல் அவர்களை அறையில் இருந்து வெளியே தள்ளி செல்லும் காட்சிகள் பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நிருபர்களின் கேள்விகளுக்கு உகந்த பதிலை சொல்ல முடியாமல் தட்டி கழிப்பதற்காக, தனது கோபத்தை நிருபர்கள் மீது திருப்பிய சம்பவம் பொதுமக்கள் மட்டுமல்ல அரசியல் கட்சியினர் மத்தியிலும் கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளதாக அரசியல் விமர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர். நிருபர்களை மிரட்டும் தொனியில் தொடர்ந்து அண்ணாமலை பேசி வருவதற்கு பத்திரிகையாளர் அமைப்புகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

* என் மீது புகார் சொல்லாதவர்கள் யாரும் இல்லை
கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம், பாஜவில் பெண்களுக்கு  பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளாரே? என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு அவர்,‘‘என்னுடைய கொள்கை என்னவெனில் கட்சியிலிருந்து யார் விலகினாலும்  அவர்களை வாழ்க என வாழ்த்துவது எனது குணம். கட்சியிலிருந்து வெளியே செல்லும்  நபர்கள் என்னையோ கட்சியையோ புகழ்ந்து பேசி செல்ல வேண்டும் என்ற கட்டாயம்  கிடையாது. அவரது கருத்துகளை கூறியிருக்கிறார். பாஜவில் நாடு முழுவதும்  லட்சக்கணக்கான மகளிர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். யாரோ ஒருவர்  கட்சியில் இருக்க பிடிக்காமல், கட்சியை விட்டு போகிறார் என்றால் அதை பற்றி  எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. அவர்களது வாழ்க்கை நன்றாக இருக்க  வேண்டும். யார் என் மீது குற்றச்சாட்டை முன் வைத்தாலும் என் பதில் மவுனம்  தான். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முடிவு  எடுக்கட்டும்’’ என்றார்.

Tags : Baja ,Annamalai ,Kamalayam , BJP Annamalai threatens reporters after asking for proof of allegations: Commotion in Kamalalayam
× RELATED தேர்தல் விதியை மதிக்கிறதே இல்ல…...