×

ஒரு மாத தடை விதித்தது ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி: டிஜிசிஏ கடும் எச்சரிக்கை

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் போதை ஆசாமி ஒருவர், பெண் பயணி மீது சிறுநீர் கழித்த அதிர்ச்சி சம்பவம் தற்போது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த நவம்பர் 26ம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணித்த பெண் பயணி மீது போதையில் இருந்த ஆசாமி ஒருவர் சிறுநீர் கழித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பெண் பயணி, டாடா குழு தலைவர் என்.சந்திரசேகரனுக்கு எழுதிய புகார் கடிதத்தில், ‘விமானத்தில் பயணிகள் தூங்க விளக்கு அணைக்கப்பட்ட வேளையில் ஒரு போதை ஆசாமி என் இருக்கைக்கு அருகே வந்தார். நான் சுதாரிப்பதற்குள் அவர் அங்கே சிறுநீர் கழித்தார்.

அதன்பின்னரும் கூட அவர் ஆடையை சரி செய்யாமல் ஆபாசமாக நின்றார். எனது உதவிக் குரல் கேட்டு சக பயணிகள் அந்த நபரை அப்புறப்படுத்தினர். விமான ஊழியர்கள் எனக்கு வேறு ஆடை தந்தனர். அந்த இருக்கையின் மீது வேறு சீட் விரித்தனர். எனக்கு ஏற்பட்ட துயரம் பற்றி புகார் அளித்தேன். ஆனால் விமானம் தரையிறங்கிய பின்னர் அந்த நபர் எதுவுமே நடக்காததுபோல் இறங்கிச் சென்றார். இந்த விஷயத்தில் விமான ஊழியர்கள் மெத்தனமாக இருந்துவிட்டனர்’ என வருத்தம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் ஒன்றிய விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு (டிஜிசிஏ) புகார் அளித்துள்ளது. மேலும், போதை ஆசாமி 30 நாட்கள் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தடை எப்போது அமல்படுத்தப்பட்டது என்ற தகவல்களை வெளியிடவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக, விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிக்கை கேட்டுள்ளது. அதன் மூத்த அதிகாரி கூறுகையில், ‘‘விமான நிறுவனத்திடம் இருந்து அறிக்கை கேட்டுள்ளோம். அதன்படி, அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

Tags : Air ,India , One-month ban imposed for drug addict who urinated on female passenger in Air India flight: DGCA warns
× RELATED துபாயில் இருந்து திருச்சிக்கு பயணி கடத்திய ஒரு கிலோ தங்கம் பறிமுதல்