ராஜஸ்தானில் வன விதி மீறல் பாலைவன ஹெலிகாப்டர் சேவை ஒரே வாரத்தில் நிறுத்தம்

ஜெய்சல்மார்: ராஜஸ்தானில் பாலைவன ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்ட ஒரே வாரத்தில் நிறுத்தப்பட்டது. ராஜஸ்தானின் சுற்றுலா வளர்ச்சிக் கழகமும், தனியார் நிறுவனமும் இணைந்து ஜெய்சல்மாரில் பாலைவன தேசிய பூங்கா அருகே சுற்றுலா பயணிகளுக்காக ஹெலிகாப்டர் சேவையை கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கின. இந்த ஹெலிகாப்டர் பயணத்தில் ஜெய்சல்மார் பாலைவனத்தின் அழகையும், அங்கு அமைந்துள்ள மணல் குன்றுகளையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கலாம். இதற்கான கட்டணம் 15 நிமிடத்திற்கு ரூ.7000.

ராஜஸ்தான் மாநில சிறுபான்மை விவகார அமைச்சர் சாலே முகமது, சுற்றுலா துறை அமைச்சர் முராரிலால் மீனா ஆகியோர் ஹெலிகாப்டர் சேவையை தொடங்கி வைத்தனர். இந்நிலையில் ஒரே வாரத்தில் இந்த சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை என காரணம் கூறப்பட்டுள்ளது. மேலும் வனத்துறை விதிகளை மீறியதால் உடனடியாக ஹெலிகாப்டர் சேவையை நிறுத்துமாறு வனத்துறை ஜெய்சல்மார் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதி அழிந்து வரும் அரிய பறவை இனமான கானமயிலின் வாழ்விடம் என்பதால், ஹெலிகாப்டர் சேவையை நிறுத்த கானமயில் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: