×

தரமற்ற முறையில் இருளர் பழங்குடியினர் குடியிருப்பை கட்டுவதா?: ஒப்பந்ததாரரை நேரில் அழைத்து கண்டித்தார் காஞ்சிபுரம் ஆட்சியர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காட்டில் இருளர் பழங்குடியினர் குடியிருப்பு கட்டடப்பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி தரமற்ற முறையில் கட்டிய ஒப்பந்ததாரரை நேரில் கண்டித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காட்டில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக 76 இருளர் பழங்குடியினர் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த குடியிருப்புகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி நேரில் ஆய்வு செய்தார். அந்த குடியிருப்புகள் தரமற்ற முறையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஒப்பந்ததாரர் பாபுவை நேரில் அழைத்து கண்டித்தார்.

இவ்வாறு பணிகளை மேற்கொண்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடித்து கொடுக்க நேரிடும் எனவும் ஆட்சியர் ஆர்த்தி ஒப்பந்ததாரரை எச்சரித்தார். இருளர் பழங்குடியினர் வசிப்பதற்காக ஊத்துக்காட்டில் ஒவ்வொரு குடியிருப்பும் தலா ரூ.4,62,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. தரமற்ற முறையில் கட்டப்பட்டு வரும் இந்த கட்டடப்பணிகளை ரத்து செய்துவிட்டு மாற்று ஒப்பந்ததாரர் மூலம் பணிகளை மேற்கொள்ளுமாறு ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியின் இந்த செயல்பாடுகள் சமூக ஆர்வலர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


Tags : Kanchipuram Collector , Nonstandard, system, dark, tribal, residential, contractor, Kanchipuram, collector
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...