×

திருமகன் ஈ.வெ.ரா மறைவுக்கு கே.எஸ்.அழகிரி, பா.சிதம்பரம், கி.வீரமணி உள்ளிட்டோர் இரங்கல்

சென்னை: திருமகன் ஈ.வெ.ரா மறைவுக்கு கே.எஸ்.அழகிரி, பா.சிதம்பரம், கி.வீரமணி, வைகோ, ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மூத்த மகன் திருமகன் ஈவெரா(46). இவர் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வந்தார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்து வந்தார்.

திருமகன் ஈரோட்டிலேயே தங்கியிருந்து தொகுதி பணிகளை கவனித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை முதல் திருமகனின் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், மதியம் சுமார் 12.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானார்.

அவரது மறைவுக்கு கே.எஸ்.அழகிரி, பா.சிதம்பரம், கி.வீரமணி, வைகோ, ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கே.எஸ்.அழகிரி: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். 46 வயது மட்டுமே நிரம்பிய அவரது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது தந்தையார் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கனத்த இதயத்துடன் அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். திருமகன் ஈ.வெ.ரா மறைவு காங்கிரசுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கி.வீரமணி: துடிப்புமிக்க இளைஞர், அரசியல் உலகில் ஜொலிக்கக் கூடியவர் என்ற எதிர்பார்ப்போடு இருந்தோம், திருமகன் ஈ.வெ.ரா.வின் மறைவு ஈடு செய்ய முடியாதது; அவரது மறைவு பெரும் வேதனையும், துயரமும் அளிக்கிறது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம்: காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா. மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். திருமகன் ஈவெரா துடிப்பான இளைஞர், மக்கள் பணியில் முழுமையாக ஈடுபடுத்தி நல்ல எம்எல்ஏ என பெயர் பெற்றவர். திருமகன் ஈவெராவின் அகால மரணம் அவரது தந்தை, குடும்பத்தினருக்கு பேரிழப்பு என்பதை நான் அறிவேன். திருமகன் ஈவெரா மறைந்தது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி காங். கட்சிக்கும் பேரிழப்பு. தம்பி திருமகனுக்கு கனத்த நெஞ்சுடன் அஞ்சலி செலுத்துகிறேன், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

வைகோ: தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், தந்தை பெரியார் அவர்களின் குடும்ப வாரிசுகளில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் மூத்த மகன் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்தவுடன் அளவுகடந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என வைகோ இரங்கல் தெரிவித்தார்.

ராமதாஸ்: தந்தை பெரியாரின் கொள்ளுப்பெயரனும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 46 வயதே ஆன அவர் இளம் வயதிலேயே காலமானதை  மனம் ஏற்க மறுக்கிறது. திருமகன் ஈவேரா அரசியலில் மிக உயர்ந்த இடங்களை அடைந்திருக்க வேண்டியவர். அவரது அகால மரணம் அந்த வாய்ப்புகளை பறித்து விட்டது. அவரை இழந்து வாடும் தந்தை ஈ.வே.கி.ச இளங்கோவன் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags : KS Azhagiri ,P. Chidambaram ,K. Veeramani ,Thirumakan , KS Azlagiri, PA Chidambaram, K. Veeramani and others condole the demise of Thirumagan EV Ra.
× RELATED தோல்வி என்பது பிரதமர் மோடிக்கு தான்,...