×

உசிலம்பட்டி அருகே 400 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே கண்மாயில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான நடுகற்களை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் - சொக்கத்தேவன்பட்டி கண்மாயில் தொல்லியல் துறை ஆய்வாளர் காந்திராஜன் தலைமையில் குழு களஆய்வு மேற்கொண்டனர். இதில் 400 ஆண்டுகள் பழமையான இரண்டு நடுகற்கள் அருகருகே கண்டுபிடிக்கப்பட்டது. முதல் நடுகல் 3 அடி அகலமும், 4 அடி உயரமும் கொண்டதாகும். இதில் குதிரையில் மீது இனக்குழுவின் தலைவன் உட்கார்ந்து ஒரு கையில் வாளும், மறுகையில் குதிரையின் கயிற்றை பிடித்து போன்று காணப்படுகிறது. இதனருகில் ஒரு பெண் ஒரு கையில் மலரை பிடித்தவாறும், மறு கையில் பண முடிப்பை பிடித்தவாறும் அலங்காரத்துடன் காணப்படுகிறது.

இதேபோல் 50 மீட்டர் அருகில் இரண்டாவது நடுகல் மூன்றரை அடி அகலமும், நான்கரை அடி உயரமும் கொண்டதாகும். இதில் குதிரையில் மீது இனக்குழுவின் தலைவன் உட்கார்ந்து ஒரு கையில் வாளும், மறு கையில் குதிரையின் கயிற்றை பிடித்தது போன்று காணப்படுகிறது. இதனருகில் இரண்டு பெண்கள் உள்ளனர். இதில் ஒரு கையில் தண்ணீர் குடம் பிடித்தவாறும், மறு கையில் பண முடிப்பை பிடித்தவாறும் அலங்காரத்துடன் காணப்படுகிறது. மேலும் இனக்குழு தலைவனுக்கும், பெண்களுக்கும் நடுவில் வெண் குடை ஒன்று உள்ளது.

இதுகுறித்து தொல்லியல் துறை ஆய்வாளர் காந்தி ராஜன் கூறுகையில், ‘‘இரண்டு இனக்குழு தலைவனுக்கு இடையில் நடைபெற்ற போரில் உயிர் நீத்த தலைவனுக்கு நினைவாக எழுப்பப்பட்ட நடுகல் இதுவாகும். இது சுமார் 400 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும். இப்பகுதியில் தொடர்ந்து தொல்லியல் எச்சங்கள் கிடைத்து வருகின்றன. எனவே அரசு இப்பகுதியில் முழுமையான களஆய்வு மேற்கொண்டால் பல்வேறு எச்சங்கள் கிடைக்கும்’’ என்றார்.

Tags : Uzilimbatti , 400-year-old mesolithic discovery near Usilambatti
× RELATED உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு