×

பொங்கல் பண்டிகைக்கு 11 நாட்கள் உள்ள நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் களைகட்டும் பனங்கிழங்கு விற்பனை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு 11 நாட்கள் உள்ள நிலையில் பனங்கிழங்கு விற்பனை களைகட்ட துவங்கி உள்ளது. 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.70 முதல் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது பனங்கிழங்கு கட்டின் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 11 நாட்கள் உள்ளநிலையில் புது தம்பதிகளுக்கு தலைபொங்கல் படி கொடுக்கவும், பொங்கல் பண்டிகையின் போது சூரிய பகவானுக்கு படையல் வைக்கவும் விவசாயிகள் விளைவித்த காய்கறிகள், கனிகள், கரும்பு, கிழங்கு வகைகளை தற்போதே அறுவடை பணிகளை துவக்கி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, வள்ளியூர், அம்பாசமுத்திரம், டவுன், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பனகிழங்குகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். பனங்கிழங்கு விற்பனை தற்போது களைகட்ட துவங்கி விட்டது. பனை மரங்களில் இருந்து பழுத்து கீழே விழும் பனம்பழத்தை எடுத்து அதில் உள்ள கொட்டைகளை பாத்தி கட்டி அதன் நடுவில் மண்மேடுகள் அமைத்து புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் அடுக்கடுக்காக விதைத்து வைத்தால் மார்கழி மாதம் இறுதியில் நல்ல விளைந்த பனங்கிழங்குகளை அறுவடை செய்யலாம். பனங்கிழங்கு கரிசல் மண், செம்மண் நிலங்களில் விளைவிக்கப்படும். செம்மண்ணில் விளையும் பனங்கிழங்கு தனிசுவையாக இருக்கும்.

பனங்கிழங்கு விளைவிக்க நிலத்தை உழவேண்டாம்  உரங்கள் வைக்க தேவையில்லை. பனங்கொட்டைகள் விதைக்கப்பட்ட பின் தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் தருவை, சேரன்மகாதேவி, மணிமுத்தாறு, மேலச்செவல், ஓமநல்லூர், திடியூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லநாடு, ஆறுமுகநேரி, திருச்செந்தூர், ஏரல் உள்ளிட்ட பல்ேவறு பகுதிகளில் பனங்கிழங்கு விளைவிக்கின்றனர். கிழங்குகள் விளைய 90 நாட்கள் ஆகும். அறுவடை செய்யப்பட்ட பனங்கிழங்குகள், காய்கறிகள் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை களைகட்ட துவங்கி உள்ளது. பனங்கிழங்கு 25 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு ரூ.70 முதல் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் போது விலை அதிகரிக்கும் என பனங்கிழங்கு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : Pongal festival ,Nellai ,Tuticorin , With 11 days left for Pongal festival, sale of weedy banana in Nellai and Tuticorin districts.
× RELATED பக்தர்களின் ‘ஆகோ அய்யாகோ’ கோஷம்...