×

40,000 மதிப்புள்ள கேமராவை வைத்துக்கொண்டு கேள்வி கேட்பதா?.. செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அண்ணாமலை..!

சென்னை: செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளை முன்வைத்த செய்தியாளர்களுடன் அண்ணாமலை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாஜவில் உண்மை தொண்டர்களுக்கு மதிப்பில்லை, பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால், பாஜவில் இருந்து விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் நேற்று அதிரடியாக அறிவித்தார். அதே நேரத்தில் என்னிடம் உள்ள ஆடியோ, வீடியோக்களை போலீசிடம் வழங்கி அண்ணாமலை குறித்து விசாரிக்க வலியுறுத்துவேன் என்றும் டிவிட்டரில் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை; பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகியதால் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது.

காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டுக்கு எல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கட்சியில் இருந்து விலகுவோரை வாழ்த்தி வழியனுப்புவதே எனது வாடிக்கை. விலகுவார்கள் யாரும் என்னை புகழ்ந்துவிட்டு செல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லை. மகளிர் அதிகளவில் பாஜகவை நோக்கி வருகிறார்கள்; யாரோ ஒருவருக்கு பிடிக்கவில்லை என கட்சியை விட்டு போகிறார்கள் என்றால், எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. எங்கு சென்றாலும் அவர்கள் நல்லா இருக்கட்டும்; வாழ்க்கையில் நினைத்தது எல்லாம் கிடைக்கனும். என் மீது அனைவரும் தான் விமர்சனம் வைக்கிறார்கள், அதற்கான பதில் என்னுடைய மவுனம் தான். என் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுவது நல்லது தான், அப்போதுதான் அது பேசுபொருளாகும் என கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளை முன்வைத்த செய்தியாளர்களுடன் அண்ணாமலை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீ எந்த சேனல்... நீ எந்த சேனல் என கேட்டு பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையில் பேசினார். என்னுடைய செய்திகளை சேகரிக்கச் சொல்லி நான் காலில் விழவில்லை. உங்க சேனல் பெயரையும் உங்கள் பெயரையும் சொல்லுங்கள். யூடியூப் சேனல்காரர்கள் கேள்வி கேட்க உரிமையில்லை. என்னுடைய செய்தியாளர் சந்திப்பிற்கு யூடியூப் செய்தியாளர்கள் வரவேண்டாம். 40,000 மதிப்புள்ள கேமராவை வைத்துக்கொண்டு கேள்வி கேட்பதா? என செய்தியாளர்களுடன் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.


Tags : Anamalai , Asking a question with a camera worth 40,000?.. Annamalai who had an argument with reporters..!
× RELATED தமிழ்நாட்டில் கூட்டணியை அதிமுக...