×

ரம்மியமாக காட்சியளிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை மாஞ்சோலை வனப்பகுதியில் கொட்டுது பனி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நெல்லை: நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை சுற்று வட்டாரங்களில் அதிக பனி மூட்டம் காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் காலை 10 மணி வரை அங்கு பனி பெய்வதை உணருகின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்ேடாபர் 29ம் தேதி தொடங்கி டிசம்பர் வரை நீடித்தது.  வடமாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் நல்ல மழை பெய்த நிலையிலும், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மழை கடைசி வரை போக்கு காட்டியது. இரு மாவட்டங்களிலும் கடந்த ஐப்பசி மாதத்தில் அதிக பனிப்பொழிவு நிலவியது.

அதிக பனிப்பொழிவு விவசாயிகள் மத்தியில் அவநம்பிக்கையை உருவாக்கி இவ்வாண்டு குறைவான மழையே கிடைக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது. அதற்கேற்ப இவ்வாண்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பனி பொழிந்த அளவுக்கு மழை பொழியவில்லை. இரவு நேரங்களில் அதிக பனிமூட்டத்தை ஒரு மாத காலமாக பொதுமக்கள் உணர்ந்து வருகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையிலும், கிராமப்புறங்களிலும் வெம்பா எனப்படும் அதிக பனிப்பொழிவு காலை நேரத்தில் நிலவி வருகிறது. இதனால் அதிகாலை நேரத்தில் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பிசான சாகுபடியில் வயல்களில் நிறைந்திருக்கும் நெல்மணிகள் பனிப்பெருக்கோடு காட்சியளிக்கின்றன.

இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ரம்மியமான பகுதிகளான மணிமுத்தாறு அணை, மாஞ்சோலை தேயிலை எஸ்டேட், நாலுமுக்கு, காக்காச்சி, குதிரைவெட்டி, கோதையாறு பகுதிகளில் அளவுக்கதிமான பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்கள் மற்றும் வனத்துறை வாகனங்களில் மாஞ்சோலைக்கு சுற்றுலா செல்வோர் காலை 10 மணி வரை பனிமூட்டத்தை உணருகின்றனர். காக்காச்சி, நாலுமுக்கு பகுதிகளில் லேசான மழைச் சாரலோடு, மேகங்கள் வயல்வெளிகளை தொட்டுச் செல்வது போல இதமான சூழல் நிலவுகிறது.

பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் தோட்டத் தொழிலாளர்களும், மின்வாரிய ஊழியர்களும் இரவு நேரங்களில் அதிக குளிரால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். மாலை 6 மணிக்கே குளிர் காற்றோடு, பனிப்பொழிவும் தொடங்கி விடுவதாக மாஞ்சோலைவாசிகள் தெரிவிக்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் வெளியே நடமாட முடியாத சூழல் நீடிக்கிறது.

Tags : Western Ghats mancholai , Delightful Western Ghats Mancholai Forest Snowfall: Tourists Delight
× RELATED லாரி முன் பாய்ந்து சுகாதார ஆய்வாளர் தற்கொலை