×

பாமக தயவில்தான் ஜெயலலிதா முதல்வரானார்: எடப்பாடி தரப்புக்கு பாமக பதிலடி

சென்னை: புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, அதிமுக நான்காக உடைந்துள்ளது. இதனால் திமுகவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கட்சியாக பாமக தான் உள்ளது என கூறியிருந்தார். இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கும்போது, பாட்டாளி மக்கள் கட்சியை ஏற்றிவிட்ட ஏணி அதிமுக தான். அதிமுக ஏற்றிவிடவில்லை என்றால் பாமக என்ற ஒரு கட்சியே கிடையாது. அதிமுக சீட்டு கொடுத்ததால் தான் பாமக வெற்றி பெற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தது. அதிமுக தான் அன்புமணிக்கு எம்.பி. என்ற பதவியை அடையாளம் காட்டியது என பல்வேறு விமர்சனங்களை பாமக மீதும், அன்புமணி மீதும் கூறினார். இதற்கு பாமக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பாமக வழக்கறிஞர் பாலு கூறியதாவது:
புதுச்சேரியில் பாமக சார்பில் பொதுக்குழுவில் அன்புமணி ராதமாஸ் தொண்டர்களிடம் உரையாற்றும்பொழுது தமிழகத்தில் உள்ள அரசியல் நிலவரங்களை எடுத்துக்கூறினார். திமுக மீதான விமர்சனம், அதிமுக பிளவுப்பட்டிருக்க கூடிய சூழல், இவற்றையெல்லாம் எடுத்துச்சொல்லி பாமகவின் களம் தற்போது நல்ல வெற்றி வாய்ப்பை தரக்கூடியதாக கூறினார். மேலும் வரக்கூடிய தேர்தலுக்கு பாமக தொண்டர்கள் தயாராக இருக்கவேண்டும் என அன்புமணி கூறினார். அதில் அதிமுக பிளவிலும் கூட எடப்பாடி பழனிசாமி தலைமையில் கணிசமான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக அவர் கூறினார். மேலும் அதிமுக பிளவுப்பட்டிருப்பது சாதாரண குழந்தைகளுக்கு கூட தெரியும்.

இந்த செய்தியை பரிமாறினோம். இதுகுறித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கருத்து கூறும்பொழுது 1998ல் அதிமுக தான் பாமகவிற்கு சீட்டு கொடுத்தது, அன்புமணிக்கு சீட்டு கொடுத்ததற்கு நாங்கள் தான் காரணம் என கூறுகிறார். முதலில் ஜெயக்குமார் யார். அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு எந்தவகையில் அவர் காரணம்.உடன்படிக்கையின் படி, எம்.பி சீட் பாமகவிற்கு வழங்கப்படுகிறது. அதனை பொறுத்து யாருக்கு அந்த சீட் கொடுக்க வேண்டும் என பாமக முடிவு செய்கிறது. பல சூழ்நிலைகளில் எங்களால் தான் எம்.பி சீட் கொடுக்கப்பட்டது என கூறிக்கொள்கின்றனர். ஆனால் 1996ம் ஆண்டை ஜெயக்குமார் திரும்பிப்பார்க்க வேண்டும்.

அதிமுக மிகப்பெரிய பலவீனமடைந்தது. அதில் ஆட்சியில் இருந்த அவர்கள் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றனர். தனித்து நின்ற பாமக 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றது. 1998ம் ஆண்டு அதிமுக பலவீனமடைந்த போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாமகவின் தலைமையகத்திற்கு வந்து அவர் கூட்டணி அமைத்து அதன்பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றனர். அதிமுக உயிர்போன போதும், அவர்களுக்கு உயிரூட்டும் வகையில் பாமக விளங்கியது. 1998ல் அந்த முடிவை எடுக்கவில்லை என்றால் அதிமுக மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கும். அதேபோல், 2001ல் பாமகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென்று ஜெயலலிதா வழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருந்தார். அதன்பிறகு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

ஜெயலலிதா பாமகவால் முதல்வர் ஆனார். எடப்பாடி பழனிசாமி 2 ஆண்டுகாலம் தொடர்வதற்கு நாங்கள் தான் காரணம். ஜெயக்குமார் அமைச்சராக தொடர பாமகதான் காரணம் என ஒருபொழுதும் கூறியதில்லை. ஜெயக்குமார் பாமக விமர்சனம் வைக்கும் பொழுது சற்று கவனமாக வைக்க வேண்டும். அன்புமணிராமதாஸ் தனது விமர்சனம் குறித்து விளக்கிய பிறகும் ஜெயக்குமார் விமர்சனம் செய்தது தவறானது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : jayalalithah ,edapadi , Bamaka, Jayalalitha became the Chief Minister, Edappadi side, Bamaka retaliated
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு