கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நிறைவு

கன்னியாகுமரி: கன்னியாகுரி திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நிறைவு பெற்றதை அடுத்து சாரம் கழற்றும் பணி தொடங்கியது. சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்த சிலை உப்பு காற்றினால் சேதம் அடைவதை தடுக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் திருவள்ளுவர் சிலையின் பராமரிப்பு பணியை தொடங்கியது. இதில் தினமும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். சிலையில் உள்ள உப்புத்தன்மையை அகற்ற சுற்றிலும் காகிதக்கூழ் ஒட்டும் பணி நடந்தது. பின்னர் இந்த காகிதக்கூழ் ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரசாயன கலவை சிலையின் மீது பூசும் பணி நடைபெற்ற்றது. ரசாயன கலவை பூசும் பணி தற்போது நிறைவடைந்து விட்டது.

இதனால் சாரம் கழற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிந்த பிறகு திருவள்ளுவர் சிலை மற்றும் அதன் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கும். பராமரிப்பு பணி முடிந்த பிறகு சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: