அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிடாததால் தேர்தல் ஆணையத்தின் 2வது கடிதத்தையும் எடப்பாடி அணியினர் திருப்பி அனுப்பினர்: டெல்லிக்கு இமெயிலில் தகவல் அனுப்பினார் தேர்தல் அதிகாரி

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலான நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் எடப்பாடி பக்கம் உள்ளனர். இதனால் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் எடப்பாடி அணியினர் கையில் உள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன்மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து நான்தான் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருகிறார். அவரும் அனைத்து மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அதிமுக கட்சி கொடி, சின்னத்தை பயன்படுத்தி வருகிறார். இந்த பிரச்னை தொடர்பான வழக்கு நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் உள்ளது.

இந்த சூழ்நிலையில், புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களும் பணி செய்யும் மாநிலங்களிலேயே வாக்களிக்கும் வகையில், ரிமோட் எலெக்ட்ரானிக் மெஷினை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து கேட்க வருகிற 16ம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடப்பட்டு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஒருங்கிணைப்பாளர் பதவி அதிமுகவில் இல்லை என்று கூறி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனுப்பிய 2 கடிதத்தையும் எடப்பாடி அணியினர் திருப்பி அனுப்பி விட்டனர். முதல் கடிதம் தேர்தல் அலுவலக ஊழியர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 2வது கடிதம் விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பி அனுப்பியதற்கான அத்தாட்சியும் தேர்தல் ஆணையத்துக்கு நேற்று முன்தினம் கிடைத்துள்ளது.

இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நேற்று ஒரு மெயில் அனுப்பியுள்ளார். அதில், ‘அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயருக்கு அனுப்பிய இரண்டு கடிதங்களையும் அவர்கள் பெறாமல் திருப்பி அனுப்பி உள்ளார்’ என்று அதில் கூறி உள்ளனர். இந்த நிலையில் வருகிற 16ம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் அதிமுக பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அந்த கடிதத்தை பெற்றுக் கொண்டு 16ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவரிடம் தனிப்பட்ட முறையில் கடிதத்தை கொடுக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டி வருகிறது.

இதுகுறித்து எடப்பாடி அணியை சேர்ந்த அதிமுக முன்னணி தலைவர் ஒருவர் கூறும்போது, ‘‘அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை. இடைக்கால பொதுச்செயலாளர் பதவிதான் உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக சார்பில் 3 முறை கடிதம் கொடுத்துள்ளோம். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு, இடைக்கால பொதுச்செயலாளர் பெயருக்கு கடிதம் அனுப்பினால் மட்டுமே பெற்றுக்கொள்வோம்’’ என்றார்.

Related Stories: