சென்னை: தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக காவல்துறை வரலாற்றில் 2022ம் ஆண்டு சவால் நிறைந்ததாகவும், வெற்றிகரமாகவும் இருந்தது. நடப்பு ஆண்டை நிறைவு செய்து, புதிய ஆண்டை வரவேற்கும் இவ்வேளையில், நாம் அடைந்த வெற்றித் தருணங்களை திரும்பி பார்க்கலாம்.
* கடந்த ஆண்டு சாதி அல்லது வகுப்புவாத மோதல், காவல்துறை துப்பாக்கி சூடு, கள்ளச்சாராய சாவு அல்லது பெரிய குற்றச் சம்பவங்கள் நிகழாமல் பாதுகாக்கப்பட்டது.
* ஜல்லிக்கட்டு, தேவர் குரு பூஜை, இம்மானுவேல் சேகரன் நினைவு நாள், மதுரை சித்திரை விழா, விநாயக சதுர்த்தி திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா ஆகியவை அமைதியாக நடந்தது.
* 2022ம் ஆண்டு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை மகாபலிபுரத்தில் நடந்த 44வது சர்வதேச செஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என சுமார் 2 ஆயிரம் வெளிநாட்டவர்களுக்கு சிறப்பான பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்தது.
* ‘ஆபரேஷன் ரவுடி வேட்டை’யில் 3,949 நபர்கள் குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டது தான், நாட்டிலேயே அதிகபட்சமாகும்.
* ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை’ நடத்தப்பட்டதன் காரணமாக தமிழகம் முழுவதும் 9,906 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய 13,491 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 24 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 4,141 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. முக்கிய நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
* போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆகியவை இணைக்கப்பட்டு, அமலாக்கப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை என்ற பிரிவு உருவாக்கப்பட்டதன் மூலம் போதை பொருள் மற்றும் பிற பொருட்களுக்கு எதிராக நடந்து வரும் நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் வேண்டாம் என்ற கருத்து தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்துள்ளது.
* ஆவடி மற்றும் தாம்பரத்தில் புதிய காவல் ஆணையரகங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நாட்டிலேயே ‘பாதுகாப்பான நகரம்’ என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தலைநகர் சென்னை மாநகரின் பாதுகாப்பை மேம்படுத்தி உள்ளது.
* முதல்வர் காவல்துறை தலைமையகத்திற்கு கடந்த 22.9.2022 அன்று நேரில் வருகை தந்து காவலர்களிடமிருந்து மனுக்களை பெற்றார்கள். இதன்படி 1,500 காவலர்களின் குறைகள் ‘உங்கள் துறையில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் தீர்க்கப்பட்டுள்ளன.
* காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவு வழங்கப்பட்டது.
* பணியின் போது உயிரிழந்த 1,132 காவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் மற்றும் காவல் நிலைய வரவேற்பாளர் பணிகள் வழங்கப்பட்டன.
* சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் முதன்மை மாநிலம் -2022 என்ற விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
* சென்னையில் கடந்த 31.7.2022 அன்று நடைபெற்ற விழாவில் இந்திய துணை ஜனாதிபதி தமிழக காவல்துறைக்கு பெருமைமிக்க குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடியை வழங்கினார்கள்.
* காவல் பணியில் உள்ள பொது பணி நிலைமைகள், காவலர் குடியிருப்பு, காவலர் நலன்கள் உள்ளிட்டவை குறித்து ஆராய நான்காவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
