திருவொற்றியூர்: திருவொற்றியூரில் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர். திருவொற்றியூர், எல்லையம்மன் கோயில் தெரு அருகே ஸ்டேட் பேங்க் காலனி 2வது தெருவில், சென்னை மாநகராட்சி சார்பில், குழந்தைகளுக்காக விளையாட்டு திடல் அமைப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இந்த இடத்தை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்டு, விளையாட்டு திடல் அமைக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அதன்பேரில், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல அலுவலர் சங்கரன் உத்தரவின்பேரில், செயற்பொறியாளர் உசேன், உதவி செயற்பொறியாளர் ஆனந்த் ராவ், இளநிலை பொறியாளர் சம்பத்குமார் ஆகியோர் நேற்று காலை பேங்க் காலனி பகுதிக்கு வந்தனர். அங்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மாநகராட்சிக்கு சொந்தமான 3 ஆயிரம் சதுர அடி நிலத்தை மீட்டனர். இதன் சந்தை மதிப்பு ரூ.1 கோடி எனவும், மீட்கப்பட்ட இடத்தில் விரைவில் விளையாட்டு திடல் அமைப்பதற்காக பணிகள் தொடங்கபடும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.