×

தலைமைச்செயலாளர்கள் கூட்டத்தில் செஸ் வரி பகிர்வு குறித்து கேள்வி எழுப்ப மாநிலங்கள் திட்டம்

புதுடெல்லி: பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை தொடர்பாக, நாளை துவங்க உள்ள தலைமை செயலாளர்கள் கூட்டத்தில், செஸ் வரி, ஒன்றிய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்ப மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. கடந்த 2017 ஜூலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து, இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை 5 ஆண்டுகளுக்கு வழங்க ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், இழப்பீடுகள் போதுமானதாக இல்லை எனவும், தாமதமாக இழப்பீடு வழங்கப்படுவதாகவும் பல மாநிலங்கள் குற்றம் சாட்டின. ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை என மாநிலங்கள் போர்க்கொடி தூக்கிய பிறகு, ஒன்றிய அரசு நிலுவைத்தொகையை விடுவித்தது.

மேலும், ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் எனவும் மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சிஏஜி அறிக்கையில், ஜிஎஸ்டியுடன் சேர்த்து செஸ் வரி வசூலிக்கப்பட்டாலும், மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி பங்களிப்பை ஒன்றிய அரசு குறைத்து வழங்கியுள்ளது அம்பலம் ஆனது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில், 2020-21 நிதியாண்டில், மாநிலங்களுக்கு வரி பங்களிப்பு முழுமையாக வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2020-21 நிதியாண்டில் ஒன்றிய அரசு சாலை மற்றும் உள்கட்டமைப்புக்கான செஸ் வரியாக ரூ.1,95,987 கோடி வசூலித்துள்ளது. ஆனால், ரூ.2,51,738 கோடி செலவு செய்துள்ளது. இதுபோல் சுகாதாரம் மற்றும் கல்விக்கான செஸ் வரியாக மேற்கண்ட நிதியாண்டில் ரூ.52,732 கோடி வசூலிக்கப்பட்டிருந்தாலும், அதற்கும் அதிகமாக, ரூ.78,287 கோடி செலவிடப்பட்டுள்ளது, என்றார். ஆனால், சிஏஜி அறிக்கையை பொறுத்தவரை, மாநிலங்களுக்கு வரி பங்களிப்பு குறைக்கப்பட்டுள்ளதை பல வகையிலும் சுட்டிக்காட்டியுள்ளது.

உதாரணமாக, மத்யமிக் மற்றும் உச்சாதர் சிக்ஷா கோஷ் மூலம் கல்விக்கான செஸ்வரி வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்துக்கு 2017 ஜூலை மாதம் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தாலும், இதற்கான கணக்கீட்டு நடைமுறைகள் இறுதி செய்யப்படாததால் இந்த திட்டம் செயல்பாட்டுக்கே வரவில்லை. ஆனால், இதன்மூலம் செஸ் வரியை ஒன்றிய அரசு வசூலித்திருக்கிறது என்பதை சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின்படி, செஸ் மற்றும் கூடுதல் வரியாக கடந்த 2021-22 நிதியாண்டில் 28.1 சதவீதம் வசூலாகியுள்ளது. இது 2019-20 நிதியாண்டில் 18.2 சதவீதமாக இருந்தது.

இதில், ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான செஸ் வரியும் அடங்கும். ஆனால், செஸ் வரியில் பகிர்ந்தளிக்க ஒன்றிய அரசு மறுப்பதால், நியாயமாக மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவதில்லை என்ற குற்றச்சாட்டை மாநிலங்கள் முன்வைத்து வருகின்றன. ஒன்றிய அரசின் நிகர வரி வசூலில், 2019-20 நிதியாண்டில் 15 சதவீதம், 2020-21 நிதியாண்டில் 9 சதவீதம் மாநிலங்களுக்கு வரி பகிர்வு குறைக்கப்பட்டுள்ளது. செஸ் வரியை காரணம் காட்டி மாநிலங்களுக்கான வரி பகிர்வு குறைக்கப்பட்டு வருவது அம்பலம் ஆகியுள்ள நிலையில், 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தின் ஒரு பகுதியாக, தேசிய அளவிலான மாநில செயலாளர்கள் கருத்தரங்கு புதுடெல்லியில் நாளை துவங்கி 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், செஸ் வரியில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிப்பது, மாநிலங்களில் ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:  ஜிஎஸ்டியில் மாநிலங்களுக்கு வரி பங்களிப்பு அளிக்க வேண்டிய நிலையிலும், செஸ் வரி, கூடுதல் வரிகள் மூலம் அதிக வரி வருவாயை ஒன்றிய அரசு ஈட்டி வருகிறது. இது மாநிலங்களுக்கு கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது. இதுபோல், மாநிலங்கள் கடன் பெறுவதற்கான வரம்பை உயர்த்த வேண்டும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை தொடர்பான பிரச்னைகள், கல்வி, வேலை வாய்ப்பு, விவசாயம், உள் கட்டமைப்பு திட்டங்கள் குறித்தும், இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : States ,Chief Secretaries , States plan to raise question on sharing of cess tax at Chief Secretaries meeting
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்