40 ஆண்டுகளுக்கு பின்பு மறுகால் பாயும் தேவசேரி கண்மாய்: பொங்கல் வைத்து மக்கள் வழிபாடு

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே உள்ள தேவசேரி கிராமத்தில் உள்ள கண்மாய் சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்பு முழுமையாக நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் கிராம மக்கள் கண்மாய் அருகே பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். அலங்காநல்லூர் அருகே உள்ளது தேவசேரி கிராமம். இந்த கிராமத்திற்கு பாசன வசதிக்காக உள்ள பழமையான கண்மாய் நீர்வரத்து இன்றி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு கிடந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கிராம மக்கள் சாத்தியார் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை கண்மாய்க்கு கொண்டு வந்து நிரப்புவதற்கு கடும் முயற்சி மேற்கொண்டனர். இந்த கிராமத்து கண்மாய்க்கு வரக்கூடிய வரத்து வாய்க்கால்கள் அனைத்தும் தூர்ந்து போய் பல இடங்களில் வாய்க்கால் இருந்ததற்கான அடையாளம் கூட இல்லாமல் இருந்தது.

இதன் பின்பு ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கும், சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோரிடம் இந்த பிரச்னை தொடர்பாக கோரிக்கை மனு அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் சாத்தியார் அணை இந்த ஆண்டு மட்டும் ஆறு முறைக்கு மேல் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்தது. இதிலிருந்து வெளியேறக்கூடிய தண்ணீர் அனைத்தும் மதுரையில் உள்ள செல்லூர் மற்றும் வண்டியூர் கண்மாய்களுக்கும் சென்றுள்ளது. இதையடுத்து இப்பிரச்னை குறித்து ேதவசேரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் தரப்பில் மீண்டும் மாவட்ட நிர்வாகத்திடமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

இதன் பின்னர் எம்எல்ஏ வெங்கடேசன், அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோரின் முழு முயற்சியால் சாத்தியார் அணையில் இருந்து வீணாக செல்லும் தண்ணீரை தேவசேரி கண்மாய்க்கு வழங்குவது தொடர்பாக ஆயக்கட்டு விவசாயிகளிடம் முறையான அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து கண்மாய்க்கான நீர்வரத்திற்கு காரணமாக இருக்கும் தூர்ந்து போன வாய்க்கால்களை மீண்டும் சீரமைத்தனர். இதையடுத்து தேவேசரி கண்மாய்க்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக தற்போது இந்த கண்மாய் முழுமையாக நிரம்பியுள்ளது. இதிலிருந்து தண்ணீர் வெளியேறி அருகிலிருக்கும் கிராமத்திற்கு செல்லக்கூடிய அளவிற்கு கண்மாய் முழுமையாக நிரம்பி மறுகால் பாய்கிறது.

இதன்படி சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்பு கண்மாய் முழுமையாக நிரம்பியதை கொண்டாடும் வகையில் அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோருக்கு கிராம மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்மாய் நிரம்பியதை கொண்டாடும் வகையில் கிராம காவல் தெய்வமான வேலப்பன் அய்யனார் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடுகளை நடத்தினர். பின்னர் கிராம மக்கள் ஆரவாரத்துடன் தண்ணீர் நிரம்பிய மறுகால் துறைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமணி சசி. கண்மாய் பாசன தலைவர் பாஸ்கரன், சூரி, ராஜேந்திரன், அறிவு, அழகுதுரை, திருமுருகன், குணா உள்ளிட்டோர் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: