மிக விறுவிறுப்பாக நடைபெறும் மேலூர் - திருப்புத்தூர் சாலை அகலப்படுத்தும் பணிகள்

* சாலையோரம் மழைநீர் கால்வாய்களுடன் நடைபாதை  

* மார்ச் மாதத்தில் நிறைவடையும் என தகவல்

மேலூர்: மேலூரில் இருந்து சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரை இணைக்கும் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகளில் 70 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது. இச்சாலையோரம் மழைநீர் வடிகாலுடன் பேவர் பிளாக் நடைபாதையும் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் வரும் மார்ச் மாதத்தில் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது. மேலூரில் இருந்து சிவகங்கை மாவட்டம் எஸ்எஸ் கோட்டை, கோட்டையிருப்பு வழியாக திருப்புத்தூர் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து மிக அதிகம். மதுரையில் இருந்து தஞ்சாவூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ேபருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் இந்த சாலையில் அதிக எண்ணிக்கையில சென்று வருகின்றன. இந்த சாலை மிக குறுகியதாக இருந்தததுடன் அதிக அளவில் வளைவுகள் இருந்தன. இதனால் விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கதையாகி வந்தன.

இதையடுத்து மேலூர் அரசு கலைக் கல்லூரி முன்பு ஜீரோ பாயிண்டில் துவங்கி, எஸ்எஸ் கோட்டை வரையிலான 19.500 கி.மீ தூரம் வரையிலான மாநில நெஞ்சாலையை அகப்படுத்தும் பணிகள் கடந்த மார்ச் 2022ல் துவங்கியது. இத்துடன் புறவழிச்சாலை மற்றும் தரம் உயர்த்துதல் என மேலும் 6 கி.மீ சேர்த்து மொத்தம் 26.07 கி.மீ தூரத்திற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்கான திட்ட மதிப்பு ரூ.118.95 கோடியாகும். தமிழக அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி இணைந்து இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கியது. இச்சாலையின் குறுக்களவு 10 மீட்டர் ஆகும். இது ஏறக்குறைய நான்குவழிச்சாலை அளவில் உள்ளது. இந்த 10 மீட்டரை தாண்டி பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக பேவர் பிளாக் கற்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் கிராமங்கள் மற்றும் நகருக்குள் சாலை நுழையும் போது அந்த பேவர் பிளாக்கை தாண்டி, மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.

இதன்படி சுமார் 1.5 மீட்டர் அகலத்தில் இந்த வடிகால் அமைக்கப்பட்டு, அதில் சேரும் மழை நீர் அந்தந்த ஊர்களில் உள்ள மழைநீர் வாய்க்காலுடன் இணைக்கப்படுகிறது. இந்த வடிகால் தார்ச்சாலையை விட சற்று உயரமாக அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கீழையூர் பகுதியில் பணிகள் முற்றிலும் முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில், கழிவு நீர் செல்லும் கால்வாய்களை இணைக்காமல், பல்வேறு இடங்களில் அரைகுறையாக விடப்பட்டுள்ளது.

இதே போல் நாவினிப்பட்டி ஊராட்சியில், சாலையோரத்தில் உள்ள நூற்றாண்டு கடந்த அரசு துவக்கப்பள்ளியின் முன்பு பள்ளியின் காம்பவுண்ட் சுவர் மட்டத்திற்கு, மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டதால், பள்ளி மாணவர்கள் அவதிப்பட்டனர். இதனால் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டது. பின் பள்ளி முன்பு மட்டும் கால்வாயின் உயரம் குறைக்கப்பட்டு வருகிறது.

தற்போது நாவினிப்பட்டி முஸ்லிம் மக்களின் இடுகாட்டின் முன்பு இதேபோல், மிக உயரமாக கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதையும் உயரம் குறைவாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இப்பகுதியில் உள்ள வளைவுகளை சரி செய்து, வழியில் உள்ள வீடுகளை இடித்து, சாலை நேராக அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சாலை முன்பு இருந்தது போன்றே, வளைந்து செல்கிறது. அங்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது இப்பணிகளில் உள்ள குறையாக மக்கள் கருதுகின்றனர். அப்பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலகுருநாதன் கூறும்போது, சாலை விரிவாக்கம் என்ற பெயரில், வீடுகளுக்கு வரும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய், கார்வான் கண்மாய் குழாய்களை நெஞ்சாலைத்துறையினர் அகற்றி விட்டனர்.

ஊராட்சி நிர்வாகத்திடம் இது குறித்து கூறினால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் கடந்த 21 நாட்களாக தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றோம். இதை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்து தரவேண்டும் என்றார். இப்பிரச்னை குறித்து சாலை பணிகளை மேற்கொண்டு வரும் திட்ட மேலாளர் ரவிக்குமார் கூறும்போது, கடந்த மார்ச் மாதம் துவங்கிய இப்பணிகள் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும். தற்போது 70 சதவிகித பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. இச்சாலை பல ஊர்கள் வழியாக வந்தாலும், மொத்தம் 5.70 கி.மீ தூரம் மட்டுமே கிராமங்களுக்குள் வருகிறது. இவ்விடங்களில் வடிகால் அமைத்து, சாலையில் மழைநீர் தேங்காத வகையிலும், நீர்நிலைகளுக்கு செல்லும் வகையிலும் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

அப்போது பணிகளின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்படுவது இயற்கை. அதே நேரத்தில் நாங்கள் உடனடியாக அவற்றை சீரமைத்து கொடுக்கிறோம். அரசு பள்ளி அருகே உயரமான கால்வாய் அமைக்கப்பட்டதால், அதன் அருகே மாணவர்கள் இறங்குவதற்கு படிகட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் இடுகாட்டின் முன்பும், உயரம் குறைவாக கால்வாய் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். நெடுஞ்சாலைத்துறையினர் கையகப்படுத்தி கொடுத்த இடத்தில் சாலையை அகலப்படுத்தி கால்வாய் அமைப்பது தான் எங்கள் வேலை. சில இடங்களில் சாலை வளைவாக இருப்பதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

இந்த பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவடைந்து, நெரிசல் மற்றும் விபத்துகள் இல்லாத வகையில் வாகன போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் இச்சாலையை மாற்றம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.

Related Stories: