×

மின் கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி குறுஞ்செய்தி மூலம் நூதன முறையில் பணம் அபேஸ்: பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க போலீசார் அறிவுறுத்தல்

பெரம்பூர்: வளர்ந்து வரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு ஏற்ப சைபர் கிரைம் குற்றங்களும் வளர்ந்து வருகின்றன. இதற்காக வடமாநிலத்தில் சிலர் அலுவலகம் அமைத்து பணியாற்றுகின்றனர். குறிப்பாக, வங்கியில் இருந்து பேசுவதாகவும், ஏடிஎம் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்றும், பிரபல கம்பெனிகளின் பொருட்களை குறைந்த விலையில் விற்பதாகவும், ஆன்லைனில் சிறப்பு பரிசு விழுந்திருப்பதாகவும் பல்வேறு வகைகளில் இந்த கும்பல் பொதுமக்களின் பணத்தை அபேஸ் செய்து வருகிறது.

அந்த வகையில் பணத்தை பறி கொடுத்தவர்கள் காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். எவ்வளவு தான் புகார்கள் கொடுத்தாலும் வடமாநிலத்தில் ஏதோ ஒரு மூலையில் டிஜிட்டல் முறையில் இயங்கும் அவர்களை கண்டுபிடிப்பதில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. மோசடியில் ஈடுபடும் நபர்கள் ஒரு முறை பயன்படுத்தும் செயலிகளை அவர்கள் மீண்டும் பயன்படுத்துவது கிடையாது. மேலும், ஒரு முறை பயன்படுத்தும் செல்போன் எண்களை அவர்கள் மீண்டும் பயன்படுத்துவது கிடையாது. இதனால், அவர்களை ட்ராக் செய்வதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வருகின்றன.

ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப திருடர்கள் பொதுமக்களை ஏமாற்றும் முறைகளை மாற்றிக் கொண்டே வருகின்றனர் அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து எஸ்எம்எஸ் வருகிறது. அதில், உங்களுக்கான மின் கட்டணம் இதுவரை செலுத்தவில்லை. உடனடியாக செலுத்தாவிட்டால் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும், என அதில் உள்ளது.

இதனால், அதிர்ச்சயடையும் வாடிக்கையாளர்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக அந்த குறிப்பிட்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டு நாங்கள் மின் கட்டணம் செலுத்தி உள்ளோம் என கூறும்போது, எதிர் தரப்பில் பேசும் நபர் உங்களது மின் கட்டணம் செலுத்திய விவரம் அப்டேட் ஆகவில்லை எனக்கூறி அப்டேட் செய்ய வேண்டும் குறிப்பிட்ட செயலியில் சென்று அப்டேட் செய்யுங்கள், என அவர்கள் ஒரு செயலியை கூறுகின்றனர்.
 
டீம் வீவர் எனப்படும் இந்த செயலியை பற்றி தெரிந்தவர்கள், அதனுள் செல்ல மாட்டார்கள். ஆனால் தெரியாத அப்பாவி பொதுமக்கள் சென்று விட்டு அதில் வரும் பாஸ்வேர்டை கூறிவிட்டால் முழு செல்போன்  பயன்பாடும் அவர்கள் கையில் சென்று விடும் என்ற தகவல் தெரியாமல் பலரும் பணத்தை பறிகொடுத்து வருகின்றனர்.

பறிகொடுக்கப்படும் பலர் பெரிய அளவில் பணம் திருடப்பட்டால் மட்டுமே புகார் தெரிவிக்கின்றனர். அவ்வாறு இல்லை என்றால் 5 ஆயிரம், 3 ஆயிரம் ரூபாய் என்றால் புகார் கொடுக்காமல் விட்டு விடுகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வடமாநில கும்பல் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஜோதி ராமலிங்கம் என்ற நபருக்கு நேற்று முன்தினம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் மின் கட்டணம் செலுத்தவில்லை என்ற தகவல் அறிந்து குறிப்பிட்ட எண்ணில் பேசிய அந்த நபரிடம் உடனடியாக டீம் வீவர் செயலியை டவுன்லோட் செய்ய கூறியுள்ளனர். அவர் சற்று உஷாராகி அந்த நபரை பற்றிய விவரங்களை ஒன்றன்பின் ஒன்றாக கேட்கும்போது அவர் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.

மேலும், அவ்வாறு பேசும் நபர்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பேசுகின்றனர். அவருக்கு எஸ்எம்எஸ் வந்தது போன்று தொடர்ந்து சென்னையில் பலருக்கும் மின் கட்டணத்தை வைத்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பொதுமக்களை ஆசை வார்த்தைகூறி ஏமாற்றி வந்த கும்பல் தற்போது மின் கட்டண மின் இணைப்பு நிறுத்தப்படும் என்று கூறி ஏமாற்றி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே வடமாநில கும்பலிடம் இருந்து பணத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என போலீசார் எச்சரிக்கின்றனர்.

செயலி மூலம் திருட்டு: அவர்கள் கூறும் செயலியில் நாம் சென்று  குறிப்பிட்ட பாஸ்வேர்டு வழங்கினால், நமது செல்போன் இயக்கம் முழுவதும்  அவர்கள் கையில் வந்து விடும். வட மாநிலத்தில் இருந்து அவர்கள் நமது  செல்போனை இயக்க ஆரம்பித்து விடுவார்கள். உடனடியாக நமது செல்போனில் உள்ள வங்கி விவரங்கள் உள்ளிட்ட பலவற்றை திருடி அதிலிருந்து ஆன்லைன் மூலமாக பணத்தை எடுத்து விடுகின்றனர்.

Tags : Abe , Abbess money through text messages claiming non-payment of electricity bills: Police advises public to be aware
× RELATED இதுதான் குஜராத் மாடல் போலி அரசு...