×

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு: திரளான பக்தர்கள் தரிசனம்

பல்லாவரம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு, இறைவன் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்று 4 திருக்கோலங்களில் ரங்கநாதப் பெருமாள், சாந்தநரசிம்மர், நீர்வண்ணப்பெருமாள், விக்ரமர் ஆகிய 4 நிலைகளில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

இக்கோயில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலமாக விளங்குகின்றது. மகாபாரத போர் முடிந்ததும், பல உயிர்களை கொன்ற பாவம் போக்க இறைவனை நினைத்து அர்ஜூனன் தவம் புரிந்து, வழிபட்ட தலமாகவும் கருதப்படுகிறது.
அதேபோன்று, இக்கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால், திருச்சி ரங்கம் மற்றும் திருப்பதி ஆகிய கோயில்களில் உள்ள பெருமாளை வணங்கிய பலனை அடைவர் என்று பூதத்தாழ்வார் தமது குறிப்பில் தெரிவித்துள்ளார். ரிஷிகளான பிருகு மார்க்கண்டேயர் மற்றும் வால்மீகி ஆகியோரின் தவத்திற்கிணங்க பெருமாள் இத்தலத்தில் தோன்றி காட்சியளித்ததாக வரலாறு குறிப்பிடுகிறது.

இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.
பின்னர், மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, பலவண்ண மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக புறப்பட்டு சொர்க்கவாசல் அடைந்தார். அங்கு பெருமாள் மற்றும் தாயாருக்கு தீபாராதனை நடைபெற்றது. ‘‘கோவிந்தா... கோவிந்தா’’... என்ற கோஷம் விண்ணை முட்ட, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக, இந்த கோயிலில் பகல் பத்து உற்சவம் நிகழ்ச்சி கடந்த 23ம் தேதி முதல் தொடங்கி, நேற்றுடன் நிறைவடைந்து, வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மேலும், நேற்று இரவு 8 மணிக்கு ராப்பத்து நிகழ்ச்சி தொடங்கி, வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவ்விழாவில் சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. சொர்க்கவாசல் திறப்பு விழாவில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பொது தரிசனம் மற்றும் 50 ரூபாய் சிறப்பு தரிசன கவுண்டர்கள் திறக்கப்பட்டது. இதன்மூலம் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வழிவகை செய்தனர். பல்லாவரம், சங்கர் நகர் மற்றும் குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Tiruneermalai ,Temple Heaven Gate , Tiruneermalai Ranganatha Perumal Temple Heaven Gate Opening Ahead of Vaikunda Ekadasi: Crowds of Devotees Darshan
× RELATED சித்திரை மாத பிரமோற்சவ விழா...