×

சேலம் மாநகரில் 50 பேரிடம் கைவரிசை காதல் ஜோடிகளின் சில்மிஷத்தை படமெடுத்து மிரட்டி நகை பறிப்பு: வியாபாரி கைது கார், பைக் பறிமுதல்

சேலம்: சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோதாவிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், காதலருடன் பைக்கில் சென்றதை மர்மநபர் படம் பிடித்து, தன்னை தனியாக சந்தித்து மிரட்டினார். 10 நாட்களுக்கு முன்பு, கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே வரவழைத்து,2 பவுன் நகையை பறித்துச் சென்றுவிட்டார். அவரை பிடித்து நகையை மீட்டுத்தர வேண்டும் எனக்கூறியிருந்தார். இதேபோல், ஓமலூரைச் சேர்ந்த 24 வயதான எம்பிஏ பட்டதாரி பெண்ணும், அந்த நபர் தன்னை மிரட்டி 2 பவுன் நகையை பறித்துச் சென்றதாக கூறி, இருந்தார். இப்புகார்கள் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், நகை பறிப்பில் ஈடுபட்டது, சேலம் வீராணம் அல்லிக்குட்டை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த சர்க்கரை வியாபாரி ராஜா (எ) சரவணன்(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது: சர்க்கரை வியாபாரி சரவணன், பைக்கில் கட்டிப்பிடித்தபடி செல்லும் காதல் ஜோடிகளை, அவர்களுக்கு தெரியாமலே ரகசியமாக தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். குறிப்பாக, தனியாக தியேட்டர், பூங்கா மற்றும் மால்களுக்கு சென்று நெருக்கமாக இருக்கும் காதல் ஜோடிகளின் சில்மிஷ காட்சிகளை படம் எடுத்து வைத்துக்கொண்டு, பிறகு அந்த பெண் மட்டும் தனியாக செல்வதை பாலோ செய்து மிரட்டி பணம், நகையை பறித்துள்ளார். ஒரு ஜோடியை பின்தொடர்ந்தால், அடுத்த 2, 3 நாட்களில் அப்பெண்ணை மட்டும் தனியாக சந்தித்து, படத்தை காட்டி மிரட்டி செல்போன் எண்களை பெற்றுக் கொள்வார். பிறகு பெற்றோரிடம் கூறி விடுவேன் என்று கூறி நகை, பணம் பறிப்பார். கடந்த 5 ஆண்டுகளாக இப்படி 50க்கும் மேற்பட்ட காதல்ஜோடிகளின் சில்மிஷங்களை படம் எடுத்து மிரட்டி, நகை, பணத்தை பறித்துள்ளார்.

இவரது வலையில் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்களின் மகள்களும் சிக்கியுள்ளனர். அவர்கள் நகையை பறிகொடுத்த பின்னும், வெளியே தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இதனால், சரவணன் மீது இதுவரை யாரும் புகார் கொடுக்காமல் இருந்துள்ளனர். தற்போது, 2 இளம்பெண்கள் கொடுத்த புகாரின் பேரில், சரவணனை கைது செய்துள்ளோம். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைதான சரவணனிடம் இருந்து ஒரு கார், 4 பவுன் நகை, ஒரு பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவரிடம் ஏமாந்த கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் புகார் கொடுக்கலாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : Salem , In Salem, 50 people were threatened with taking photos of hand-in-hand couples and robbed them of their jewellery: the dealer was arrested, the car and the bike seized.
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை