×

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழகம் - மும்பை மோதல்

மும்பை: ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவில் தமிழகம் - மும்பை அணிகள் மோதும் லீக் ஆட்டம், மும்பையில் இன்று தொடங்குகிறது. நடப்பு ரஞ்சி சீசனில் மொத்தம் 38 அணிகள் 5 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. பி பிரிவில் உள்ள தமிழ்நாடு தனது முதல் லீக் ஆட்டத்தில்  ஐதராபாத்  அணியுடனும், 3வது ஆட்டத்தில் டெல்லி அணியுடனும்  டிரா செய்தது. 2வது  ஆட்டத்தில் ஆந்திராவிடம் 8 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

இந்த 3 போட்டியிலுமே தமிழக அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக 2 டிரா, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் மட்டுமே பெற்று 6வது இடத்தில் பின்தங்கியுள்ளது. இந்திரஜித் தலைமையிலான தமிழக அணியில் சாய் சுதர்சன்,  நாராயண் ஜெகதீசன், அபராஜித், விஜய் சங்கர், விக்னேஷ், அஸ்வின் கிறிஸ்ட், சாய் கிஷோர், சந்தீப் என எல்லோருமே பார்மில் இருந்தாலும், கடைசி கட்ட பதற்றம் பெரும் பின்னடைவை கொடுத்து வருகிறது.மும்பைக்கு எதிராக ஒருங்கிணைந்து விளையாடி  முதல் வெற்றியை வசப்படுத்தாவிட்டால், காலிறுதி வாய்ப்பு பற்றி தமிழகம் யோசிக்கக் கூட முடியாது.

அதே சமயம், மும்பை அணி ஆந்திராவை 9விக்கெட் வித்தியாசத்திலும், ஐதராபாத்தை 217 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. 3வது லீக் ஆட்டத்தில் சவுராஷ்டிராவுக்கு எதிராக 48 ரன் வித்தியாசத்தில் தோற்றாலும், அந்த அணி 13 புள்ளிகளுடன் பி பிரிவில் முதலிடம் வகிக்கிறது. பிரித்வி ஷா,   ஜெய்ஸ்வால், கேப்டன் ரகானே, சர்பராஸ் கான் என சர்வதேச, உள்நாட்டு தொடர்களில் கலக்கிய முன்னணி வீரர்கள்  தமிழக அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க காத்திருக்கின்றனர். புள்ளிப் பட்டியலில் முன்னிலையை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள மும்பை அணியும், முதல் வெற்றிக்காக தமிழகமும் வரிந்துகட்டும் நிலையில், பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டி மிகவும் சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

Tags : Ranji Trophy Cricket ,Tamil Nadu ,Mumbai Clash , Ranji Trophy Cricket: Tamil Nadu vs Mumbai Clash
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...