×

அன்பழகனுக்கு டிபிஐ வளாகத்தில் சிலை அமைக்க தடை கோரிய மனு தள்ளுபடி

சென்னை: மறைந்த முன்னாள் அமைச்சர் க.அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ஒட்டி, பள்ளிக் கல்வி இயக்குனரகம் அமைந்துள்ள டி.பி.ஐ வளாகத்தில் அவரது சிலை அமைக்கப்படும் என நவம்பர் 30ம் தேதி அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை உடையாம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலைகள் அமைக்க கூடாது என்று உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளன.

மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் வைத்தால், ஆட்சிக்கு வரும் கட்சிகளும் தங்கள் தலைவர்கள் சிலைகளை அமைக்கும் வகையில் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று தெரிவித்து இருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Anbazagan ,TBI , Petition seeking ban on erecting statue of Anbazagan in TBI premises dismissed
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு