×

கடந்த அதிமுக ஆட்சியில் தகுதியற்றவர்களுக்கு கலைமாமணி விருது; நிபுணர் குழு விரைவில் ஆய்வு: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சமுத்திரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் 2019, 2020ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் 20.02.2021ல் வழங்கப்பட்டது. இதில், தகுதியில்லாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. எனவே விருதை திரும்ப பெறுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் ஏற்கனவே விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்த நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர்.

அதில், ‘‘கலைமாமணி விருது வழங்கப்பட்டது தொடர்பாக ஆய்வு செய்ய இயல், இசை, நாடக மன்றத்தால் நிபுணர் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையில் சாதித்தவர்கள் மற்றும் அதிக பங்களிப்பை கொடுத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், இதற்கென முறையாக எந்தவித விண்ணப்பமும் இல்லை. தேர்வுக்குழு தான் விருதாளர்களை தேர்வு செய்கிறது.  விருதாளர்களுக்கான தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்க வேண்டும். மதம், இனம் உள்ளிட்ட எந்தவித பாகுபாடும் இன்றி வெளிப்படைத் தன்மையுடன் விருது வழங்க வேண்டும். அதே நேரம் கலைமாமணி விருது தகுதியற்றோருக்கு வழங்கப்பட்டது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, உண்மையாகவும், வௌிப்படைத்தன்மையுடனும் பாகுபாடின்றி விருது வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இயல், இசை, நாடக மன்றத்தின் பணி மற்றும் கடமையை முறையாக மேற்கொண்டு முறையாக விருதுகள் வழங்கிடும் வகையில் நிபுணர் குழுவை 3 மாதத்திற்குள் மறு சீரமைப்பு செய்ய வேண்டும். கலைமாமணி விருதுக்கான தகுதிகள், அளவு உள்ளிட்டவைகளைக் கொண்ட வழிகாட்டுதல்களை உருவாக்கி, அனைவரும் அறிந்திடும் வகையில் வெப்சைட்டில் வெளியிட வேண்டும். தகுதியான விருதாளர்கள் பாகுபாடின்றி, வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். 2019-20ல் தகுதியற்றோருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது குறித்து நிபுணர் குழுவை விரைவில் அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். இக்குழு 3 மாதத்திற்கு மிகாமல் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் விளக்கமளிக்க வாய்ப்பளித்து அதை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

Tags : AIADMK ,ICourt , Kalaimamani Award for those who did not deserve in the last AIADMK regime; Expert panel soon examines: ICourt branch orders action
× RELATED தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை...