×

பொங்கல் பரிசு தொகுப்பை பெற ரேஷன் கடைகளில் இன்று முதல் டோக்கன் விநியோகம்: ஒருநாளைக்கு 200 டோக்கன்கள் வழங்கப்படும்; அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏழை-எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை வரும் ஜன.9ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதேநாளில் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளனர்.

இந்தாண்டு, பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1000 ரொக்க பணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார். குறிப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் என 2.19 கோடி பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.2,429 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது.

குடும்பத் தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மூலம் ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர். அதேபோல், பொங்கல் பண்டிகைக்கான ரூ,1000, கரும்பு, பச்சரிசி மற்றும் சர்க்கரை பெறவும் ஸ்மார்ட் கார்டுடன் கைரேகை பதிவு செய்யப்பட உள்ளது. இவை பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கம் வழங்குவதில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக இவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்களை வீடு வீடாக இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.

ஒருநாளைக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 8ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படவுள்ளது. இந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்டவை இடம் பெற்று இருக்கும். அந்த நேரத்தில் சென்று பொதுமக்கள் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் பரிசு தொகுப்பில் குறைகள் இருந்தால் கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்  தெரிவிக்கலாம். மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றவுடன் அதுகுறித்த குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Pongal , Token distribution at ration shops to avail Pongal gift package from today: 200 tokens per day; Officers information
× RELATED காரையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா