×

ரஷ்யாவின் கொள்கையை பின்பற்றும் சீனா உக்ரைன் நிலையில் உள்ளது இந்தியா: ராகுல் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கடைபிடிக்கும் அதே அணுகுமுறையை, இந்தியாவுக்கு எதிராக சீனா பின்பற்றுகிறது. இதனாலேயே எல்லையை மாற்ற அச்சுறுத்தி வருகிறது’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கடந்த மாதம் 24ம் தேதி டெல்லியில் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் நடிகர் கமலஹாசன் பங்கேற்றார். அப்போது, ராகுல், கமலஹாசன் இருவரும் தனியே சந்தித்து பேசிய நிகழ்வை, ராகுலின் யூடியூப் சேனலில்  நேற்று வெளியிடப்பட்டது.

அதில் ராகுல் பேசியிருப்பதாவது: மேற்கத்திய நாடுகளுடன் உக்ரைன் வலுவான உறவு வைத்திருப்பதை ரஷ்யா விரும்பவில்லை. அதையும் மீறி மேற்கத்திய நாடுகளுடனான உறவை உக்ரைன் வலுப்படுத்த முயன்றால், அதன் எல்லையை மாற்றுவோம் என்றது ரஷ்யா. ரஷ்யாவின் இந்த அணுகுமுறையைத்தான் இந்தியாவுக்கு எதிராக சீனாவும் பின்பற்றுகிறது. இதனால் உக்ரைனின் நிலைமைதான் இந்தியாவுக்கும் இப்போது உள்ளது.இந்தியாவில் இப்போது பலவீனமான பொருளாதாரம், தொலைநோக்கு பார்வையற்ற குழப்பமான அரசு, வெறுப்பு மற்றும் கோபம் போன்றவை நிலவுகின்றன. இந்த நிலையில், சீனர்கள் உள்ளே நுழைந்து என்ன வேண்டுமானமாலும் செய்யலாம்.

நான், போர் வெறி கொண்டவன் அல்ல. உண்மையான இந்தியனாக, எல்லையில் உண்மையிலேயே பிரச்னைகள் உள்ளன, அந்த பிரச்னையையும், உள்நாட்டில் என்ன நடக்கிறது என்பதையும் நம் தேசம் அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். உள்நாட்டில் நிலவும் பிரச்னைகளை எதிரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, எல்லை பிரச்னை பற்றி குறைந்தபட்சம் எதிர்க்கட்சிகளிடமாவது ஒன்றிய அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால், நாங்கள் உங்களுக்கு உதவலாம். ஆலோசனை வழங்கலாம்.  இவ்வாறு ராகுல் கூறி உள்ளார்.

* இந்திய ஒற்றுமை யாத்திரை ஜனவரி 30ல் முடிவடைகிறது
ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை 9 நாள் இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும் டெல்லியில் தொடங்க இருக்கிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை 108 நாளில் இதுவரை 3,122 கிமீ தூரம் கடந்து சென்று இருக்கிறது. இன்று காலையில் டெல்லியில் துவங்கி மாலையில் உபியில் நுழைகிறது. ஜனவரி 5 வரை உபியிலும், ஜன.6ல் முதல் 10ம் தேதி வரை அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் ஜனவரி 11 முதல் 20ம் தேதி வரையிலும், இடையில் ஜனவரி 19ம் தேதி மட்டும் இமாச்சல் மாநிலத்திலும் செல்லும் யாத்திரை ஜனவரி 20ம் தேதி காஷ்மீர் செல்கிறது. அங்கு ஜனவரி 30ம் தேதி ஸ்ரீநகரில் தேசிய கொடி ஏற்றி வைத்து ராகுல் யாத்திரையை முடித்துக்கொள்கிறார். இந்த தகவலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால், தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் தெரிவித்தனர். இதற்கிடையே இன்று உபியில் நுழையும் யாத்திரைக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்யாதவ் வாழ்த்து தெரிவித்து உள்ளார். ஆனால் அவரோ அல்லது சமாஜ்வாதி கட்சியினரோ யாத்திரையில் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பிரதமர் மீது தாக்கு
ராகுல் மேலும் பேசுகையில், ‘‘21ம் நூற்றாண்டில் நாட்டின் பாதுகாப்பு என்பது அனைத்தையும் அடங்கிய முழுமையான விஷயமாகி விட்டது. நம் எதிரிகள் எல்லையில்தான் தாக்குவார்கள் என்றில்லை. சைபர் தாக்குதல் நடத்தலாம். உள்நாட்டில் பிரச்னையை தூண்டிவிட்டு நாட்டை சிதைக்கலாம். எனவே உள்நாட்டில் ஒவ்வொருவர் இடையே ஒற்றுமை வேண்டும். நல்லிணக்கம் இருக்க வேண்டும். அமைதி நிலவ வேண்டும். நம் எல்லையை ஆக்கிரமித்து சீன ராணுவம்  அமர்ந்திருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி, ‘‘யாராலும் உள்ளே வர முடியாது’’ என்கிறார். அப்படியென்றால் சீனா என்ன நினைக்கும்? ‘நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், இந்தியா எதுவும் செய்யாது’ என்று தானே நினைப்பார்கள்’’ என்றார்.

Tags : China ,Russia ,Ukraine ,India ,Rahul , China following Russia's policy is in Ukraine situation India: Rahul warns
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...