×

பொன் மாணிக்கவேல் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க மீண்டும் மறுப்பு தெரிவித்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: பொன் மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்திருக்கிறது. தனக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல் முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ண முராரி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

ஏற்கனவே இந்த மனு கடந்த நவம்பர் 24ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பொன் மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அச்சமயம் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்ததுடன், மேல் முறையீட்டு மனு தொடர்பாக 3 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கும், சிபிஐக்கும், எதிர்மனுதாரர் காதர் பாஷாவுக்கும் உத்தரவிட்டிருந்தது. இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பிலும், சிபிஐ சார்பிலும் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்துகொண்ட உச்சநீதிமன்றம், இந்த விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தது. தொடர்ந்து, பொன் மாணிக்கவேல் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். அதற்கு, மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், பொன் மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்கலாம் என்று கூறி வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.


Tags : Supreme Court ,CBI ,Pon Manikavel , Pon Manikavel, CBI investigation, Supreme Court
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...