திருச்செந்தூர் நகராட்சியில் 2 மாதங்களுக்குள் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் கே.என்.நேரு

தூத்துக்குடி: திருச்செந்தூர் நகராட்சியில் இரண்டு மாதங்களுக்குள் அனைத்து வீடுகளின் குழாய் இணைப்புகளும் சரி செய்யப்பட்டு பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தோப்பூரில் செயல்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படும் முறை குறித்தும் சுத்திகரிப்பு நிலையத்தை பராமரிப்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தப் பகுதிகளில் வெறும் 300 வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்ட காரணத்தால், சாக்கடைகள் அனைத்தும் அடைத்துக் கொண்டன. தற்போது அவை அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, புதிதாக குழிகள் அமைத்து சரி செய்ய எப்படியும் குறைந்தது இரண்டு மாதங்களாகும். இந்தப் பணிகள் முடிந்தவுடன் அனைத்து வீடுகளுக்கும் இணைப்புகள் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், இங்குள்ள இரண்டு குளங்களையும் சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். சாக்கடை நீர் குளத்தில் கலக்காத வகையில், குழாய்கள் அமைத்து கழிவு நீரை அகற்றவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், பேருந்து நிலையம், கழிவறைகள், தகன மேடை அமைப்பது தொடர்பான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories: