×

மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு டிபிஐ வளாகத்தில் சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை டி.பி.ஐ வளாகத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ஒட்டி, பள்ளிக் கல்வி இயக்குனரகம் அமைந்துள்ள டி.பி.ஐ வளாகத்தில் அவரது சிலை அமைக்கப்படும் என நவம்பர் 30ம் தேதி அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை உடையாம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘‘சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலைகள் அமைக்க கூடாது என உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளன. மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் வைத்தால், ஆட்சிக்கு வரும் கட்சிகளும் தங்கள் தலைவர்கள் சிலைகளை அமைக்கும் வகையில் தவறான முன்னுதாரணமாகிவிடும். தலைவர்களை கவுரவிக்க அவர்கள் பெயரில் நலத் திட்டங்களை தொடங்கினால், பொதுமக்களுக்கும் பயனளிக்கும். அதை விடுத்து சிலைகளை அமைப்பதால் அரசுக்கு செலவு ஏற்படுவதுடன், எதிர்கட்சியினர் மத்தியில் விரோதத்தையும் ஏற்படுத்தும்.

ஏற்கனவே சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அன்பழகனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளதால், டிபிஐ வளாகத்தில் அவரது சிலையை அமைக்க தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Anbazagan ,TBI ,Madras High Court , Dismissal of case against installation of statue of late former minister Anbazagan in TBI premises: Madras High Court orders
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...