×

நீலகிரியில் கோத்தர் இன மக்களின் கம்பட்ராயர் திருவிழா: அய்யனோர், அம்மனோர் தெய்வங்களுக்கு வழிபாடு..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கோத்தர் இன மக்களின் பாரம்பரிய பண்டிகையான கம்பட்ராயர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மூன்று நாட்கள் கொண்டாடப்படும் பழங்குடியின, பாரம்பரிய திருவிழா. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பழங்குடி இனக்குழுவினர் வசித்துவருகின்றனர். இவர்கள் தங்கள் மரபுரீதியான பண்பாட்டு தொடர்ச்சியை விடாமல் கடைபிடித்து வருகின்றனர். இவர்களில் கோத்தர் இன குலதெய்வமான அய்யனோர், அம்மனோர் கோவில் கோத்தகிரியில் உள்ள நேரு பூங்கா வளாகத்தில் அமைந்துள்ளது.

நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த கோயில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்வழிபாடு கம்பட்ராயர் திருவிழா என அழைக்கப்படுகிறது. இவ்வாண்டு திருவிழாவை ஒட்டி மக்கள் தங்கள் வீடுகளை சுத்தப்படுத்தி விரதத்தை தொடங்கினர். காலையில் புது கோத்தகிரி பூசாரிகள் மற்றும் கிராமத்தை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாரம்பரிய உடையணிந்து சுமார் 4 கிலோ மிட்டர் தொலைவில் உள்ள அய்யனோர், அம்மனோர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

கோயில் நடை திறக்கப்பட்டு நெய்தீபம் ஏற்றி தூபம் காட்டி கம்பட்ராயரை வழிபட்ட பின்னர் கோயிலின் முன்புறமுள்ள நடுகல்லை சுற்றி பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க நடனமாடி மகிழ்ந்தனர்.  இதை அடுத்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கோயில் மீண்டும் பூட்டப்பட்டது. திங்கள்கிழமை அன்று கோயிலில் சாமையரிசி சோறும் உப்புசாம்பாரும் செய்து தங்களின் குலதெய்வத்திற்கு படையலிட்டு வழிபடுவார்கள். செவ்வாய் மற்றும் புதன் கிழமை தங்களது கிராமக்கோயிலில் ஆண்களும், பெண்களும் தனி தனி குழுவாக பாரம்பரிய நடனமாடி வழிபாடு நடத்துவார்கள். அத்துடன் கம்பட்ராயர் திருவிழா நிறைவடைகிறது.   


Tags : Kothar Festival ,Nilgiris ,Ayyanor ,Ammanor , Gothagiri, Kambatrayar festival, worship of deities
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்