×

தென்காசி மாவட்டத்தில் ஒரே கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள்: 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு..!!

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் ஒரே கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் செயல்பட்டுவருவது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நாகரீக யுகத்தில் அரிசி ஆலைகள் கூட நவீனமயமாகிவிட்டது. கணினிமூலம் அரிசியில் பழுதுநீக்குவதும் சாத்தியமாகிவிட்டது. இத்தகைய நவீன அரிசி ஆலைகள் 60க்கும் மேற்பட்டவை ஒரே ஒரு கிராமத்தில் இருக்கிறது என்றால், அது தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் கிராமம். தெருவுக்கு ஒன்று அல்லது இரண்டு அரிசி ஆலைகளாக காணப்படும் நிலையில் இந்த ஆலைகள் மூலம் 15 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை பெறுகின்றனர்.

வியாபாரிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் இங்கே கொண்டுவரப்பட்டு தினமும் 600 முதல் 1000டன் அரிசி தயாராகி பல மாவட்டங்களுக்கும், அண்டைமாநிலமான கேரளாவுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது. இங்கு நெல்லையும், அரிசியையும் பிரித்தெடுக்கும் முறையே சுவாரசியமானது. ஒரு இயந்திரத்தில் நெல்லை கொட்டி கல் மற்றும் தூசி நீக்கப்படுகிறது. பின்னர் 12 மணி நேரம் தண்ணீரில் ஊரவைக்கப்பட்டு பின்னர் தகதகவென கொதிக்கும் தண்ணீரில் அவிக்கப்பட்டு உலரவைக்கப்படுகிறது.

18 மணிநேரம் உலர்த்தபின் நெல் அரவைஇயந்திரம் மூலம் பிரித்தெடுக்கபடும் அரிசியில் இருந்து கல், குருணை நீக்கபடுகிறது. இந்த அரிசியை 10 கிலோ 25 கிலோ என பல வகைகளில் பேக்கிங் செய்யப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது. பழமையை விரும்பும் மக்கள் தங்கள் வயல்களில் உற்பத்தியாகும் நெல்லை வீடுகளில் அவித்து இங்கே கொண்டுவந்து அரைத்து சத்துமிக்க அரிசியாக கொண்டு செல்கிறார்கள். இப்படி பழமையும், நவீனமும் ஒன்று சேர பல்லாயிரம் பேருக்கு சோறுபோட்டு கொண்டிருக்கிறது பாவூர் கிராமம்.

Tags : South Kasi district , Tenkasi, rice mills, employment
× RELATED குன்னூர் பேருந்து விபத்து...