ஒருநாள் உலக கோப்பைக்கு பிசிசிஐ புதிய திட்டம்: அணியும் தயார் வழிமுறையும் தயார்

மும்பை: இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலக கோப்பைக்கான 20 பேர் கொண்ட இந்திய அணியை  முடிவு செய்ததுடன், கோப்பையை வெல்வதற்காக வழிகாட்டு திட்டங்களும்  பிசிசிஐ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளன.

 இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) நேற்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இதில்   பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, கவுரவ செயலாளர் ஜெய் ஷா, கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர்  ராகுல் திராவிட், தேசிய கிரிக்கெட் அகடமி(என்சிஏ) தலைவர் விவிஎஸ் லட்சுமணன், தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா  ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆண்டு  ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில்  நடைபெற உள்ளது. இந்தப்போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியை தேர்வு  செய்வது, தயார் செய்வது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்,  வாய்ப்புகள் , வீரர்களின் பணிசு்சுமை மேலாண்மை, உடற்பயிற்சிக்கான அளவு கோல்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

கூட்டத்துக்கு பிறகு ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ள பரிந்துரைகள், ‘வளர்ந்து வரும் வீரர்கள்  தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு , கணிசமான உள்நாட்டு தொடர்களில் விளையாட வேண்டும். இப்போது வீரர்களை தேர்வு செய்வதற்கான அளவுகோல்களாக உள்ள  யோ-யோ சோதனை(உடல் திறன், ஓட்டத்திறன் கண்டறிய..), டெக்சா சோதனை(எலும்புகளின் உறுதித் தன்மை கண்டறிய..) ஆகியவை தொடரும்.

கூடவே உலக கோப்பைக்காக தயாரிக்கப்படும்  வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள சோதனைகளும் கருத்தில் கொள்ளப்படும். மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச ஆட்டங்கள், ஐசிசி உலக கோப்பைகளுக்கான வீரர்களை தயார் செய்வதற்கு  இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களை என்சிஏ, ஐபிஎல் உரிமையாளர்களுடன் இணைந்து கவனிக்கும்.’ என்று கூறப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில்  ஐசிசி ஒருநாள் உலக கோப்பைக்கு 20பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐ தயார் செய்துள்ளது. இந்த ஆண்டு நடக்கும் போட்டிகளில் அந்த 20பேரின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.  சிறப்பாக விளையாடாவிட்டால் கழற்றி விடப்படுவார்களாம். கூடவே உள்நாட்டு தொடர்களில், தேசிய அணிகளில் தொடர்ந்து  சிறப்பாக விளையாடினால் இளம் மற்றும் புதுமுக வீரர்களுக்கும் கூட இடையில் உலக கோப்பை அணியில் வாய்ப்பு பெறலாம்.

அதே நேரத்தில் அந்த 20 பேர் கொண்ட அணியில் யார், யார் இடம் பிடித்துள்ளனர் என்பதை பிசிசிஐ நேற்று தெரிவிக்கவில்லை.

Related Stories: