×

தமிழக நெடுஞ்சாலைத்துறையின் 2022ம் ஆண்டு சாதனைகள்: அதிகாரிகள் தகவல்

சென்னை: திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு துறைகளில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. அதன் ஒருகட்டமாக, நெடுஞ்சாலைத்துறையிலும் சாதனை படைத்து வருகிறது. பாதுகாப்பான பயணம் மற்றும் நெரிசலற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் மாநிலத்தின் நெடுஞ்சாலை தொடரமைப்பு உருவாக்குவதும், பராமரிப்பதும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் முக்கிய குறிக்கோளாக அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான நெடுஞ்சாலைத்துறை செயல்பட்டு வருகிறது.

இதை நன்கு அறிந்துகொண்டு அரசு நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்வதில் முனைப்புடன் உள்ளது. குறிப்பாக, அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீண்ட கால திட்டங்களை வகுத்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை சாலைகள், பாலங்களை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், கிராமங்களுக்கு இணைப்பு சாலைகள் அமைத்தல் ஆகியவற்றில் கடந்த 75 வருடங்களாக தனது பங்கை அளித்து வருகிறது.

கடந்த ஆட்சி காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறு இருந்த சில பகுதிகளில் மேம்பாலங்களும், விபத்துகள் ஏற்படுத்தும் வகையில் இருந்த சாலைகளை விரிவுபடுத்தியும், 2 வழிச்சாலைகள் 4 வழித்தடங்களாகவும், 4 வழிச்சாலைகள் 6 வழித்தடங்களாகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட பகுதியில் நீண்டநாள் பிரச்னையாக இருந்து வந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும்விதமாக உயர்மட்ட மேம்பாலங்கள், கிடப்பில் போடப்பட்டிருந்த மேம்பால பணிகள் உள்ளிட்டவை இந்தாண்டில் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டவரப்பட்டுள்ளது. சாலை மற்றும் பாலங்களைக் கட்டும்பொழுது சில இடங்களில் காலதாமதம் ஏற்படுகிறது. அதற்கான காரணம் என்ன, பணி செய்யும் பொழுது ஏற்படும் சங்கடங்கள் என்ன என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டு உடனுக்குடன் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

நெடுஞ்சாலைத்துறையின் 2022ம் ஆண்டின் சாதனைகள்... சிஆர்ஐடிபி திட்டத்தில் ரூ.2476.73 கோடி செலவில் 1844 கி.மீ. நீளமுள்ள சாலைகள் அகலப்படுத்தும் பணி, 298 எண்ணிக்கையிலான சிறுபாலங்கள், பாலப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.459.43 கோடி மதிப்பில் 2030.33 கி.மீ. நீள சாலைகளில் ஓடுதள தரத்தை மேம்படுத்தும் பணிகள் நடப்பாண்டில் முடிக்கப்பட்டுள்ளன.

46 உயர்மட்ட பாலங்கள் ரூ.1,78.66 கோடி செலவில் முடிக்கப்பட்டள்ளன.மாநில நிதியின் கீழ் 175.35 கி.மீ. நீளமுள்ள 69 ஊராட்சி சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக ரூ.191.94 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன. 3 ரயில்வே மேம்பாலங்கள் ரூ.73.89 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன.
2 சாலை மேம்பாலங்கள் ரூ.173.70 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன.

அதிக வாகன நெருக்கடி மிகுந்த 498.17 கி.மீ. நீளமுள்ள சாலைகளில் தரம் உயர்த்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் 114 கரும்புள்ளிகளுக்கு நிரந்தர சீரமைப்பு பணிகள் ரூ.180.96 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன.

2022ல் முடிக்கப்பட்ட பணிகள்...
* 2 ரயில்வே மேம்பாலங்கள் ரூ.36.89 கோடி மதிப்பிலும், ஒரு உயர்மட்ட பாலம் ரூ.27.92 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி விஜயநகர் ஈரடுக்கு மேம்பாலம்:
விஜயநகரம் சந்திப்பில் தரமணி சாலை, தாம்பரம்-வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையை இணைத்து மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் இரண்டு அடுக்கு ேமம்பாலங்களாக ஒவ்வொன்றும் 7.5 மீட்டர் அகலம் கொண்ட இருவழித்தட ஒரு வழி ேமம்பாலமாகும். தரமணி இணைப்பு சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையை இணைத்து 1028 மீட்டர் நீளத்தில் ரூ.67 கோடி மதிப்பீட்டில் இரண்டாம் அடுக்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ரூ.78.49 கோடி செலவில் வேளச்சேரி புறவழிச்சாலை - வேளச்சேரி- தாம்பரம் சாலையை இணைத்து 640 மீட்டர் நீளத்தில் முதல் அடுக்கு மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

மேடவாக்கம் மேம் பாலம்...
மேடவாக்கத்தில் வேளச்சேரி- தாம்பரம் தடத்தில், மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பு மற்றும் மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்புகளை இணைந்து 1.06 கி.மீ. நீளத்தில் ரூ.95.21 கோடி மதிப்பீட்டில் மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது.

பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலம்..
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலத்தன் 743 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகலமும் கொண்ட இருவழித்தட ஒரு வழி செங்கல்பட்டு- சென்னை பாலப்பகுதி கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. முதலமைச்சர் சாலை மேம்பாடுத் திட்டம்: முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம் என்பது போக்குவரத்து செறிவின் அடிப்படையில் சாலைகளை அகலப்படுத்த உருவாக்கப்பட்ட திட்டமாகும். மாவட்ட தலைமையிடங்கள் மற்றும் தாலுகா தலைமையிடங்களை இணைக்கும் 2200 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள் நான்கு வழித்தட சாலைகளாகவும் மற்றும் 6700 கி.மீ. நீளமுள்ள சாலைகள் இரண்டு வழித்தட சாலைகளாகவும் போக்குவரத்து செறிவின் அடிப்படையில், அடுத்த 10 ஆண்டுகளில் அகலப்படுத்தப்படும்.

* 4 வழிச்சாலையாக அகலப்படுத்துவதற்கு 2021-22ம் ஆண்டில் 255.02 கி.மீ. நீளமுள்ள மாநில சாலைகள் ரூ.2123.64 கோடி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
* 2 வழிச்சாலையாக அகலப்படுத்துவதற்கு 2021-22ம் ஆண்டில், 630.105 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.865.35 கோடி மதிப்பில் 2022-23ம் ஆண்டில் 524.45 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.802.94 கோடி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
* 1281 தரைப்பாலங்களுக்கு பதிலாக உயர்மட்ட பாலங்கள் கட்டுதல் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றும் பணிகள் 2026ல் முடிக்கப்படும்.
* 2021-22ம் ஆண்டில், 648 தரைப்பாலங்கள் ரூ.609.71 கோடி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

முன்னேற்றத்தில் உள்ள பணிகள்...
161 உயர்மட்ட பாலங்கள் ரூ.947.68 கோடி மதிப்பில் நபார்டு வங்கி கடன் உதவி திட்டத்திலும் 21 பாலங்கள் ரூ.313.35 கோடி மதிப்பில் மாநில நிதி திட்டத்தின் கீழும் முன்னேற்றத்தில் உள்ளன. 25 ரயில்வே மேம்பாலங்கள், கீழ் பாலங்கள் ரூ.1163.43 கோடி மதிப்பில் ரயில்வே திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தில் உள்ளன. நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய ஒரு நடைமேம்பாலம் தாம்பரத்தில் ரூ.19.75 கோடி மதிப்பில் முன்னேற்றத்தில் உள்ளது. கோயம்புத்தூர் நகரத்திற்கு மேற்கு சுற்றுச்சாலை (கட்டம்-1) அமைக்கும் பணி ரூ.250 கோடி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

2022-23ம் ஆண்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட திட்டங்கள்...
* மாவட்ட தலைமையிடங்கள் மற்றும் தாலுகா தலைமையிடங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலைகள், 147.90 கி.மீ. சாலைகள் ரூ.1406.71 கோடி மதிப்பில் 4 வழித்தட சாலைகளாகவும் 524.45 கி.மீ. சாலைகள் ரூ.802.94 கோடி மதிப்பில் இரு வழிச்சாலைகளாகவும் அகலப்படுத்தும் பணிகள்.
* அனைத்து காலநிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்துக்காக ரூ.560.17 கோடி மதிப்பில் 131 தரைப்பாலங்களுக்கு பதிலாக உயர்மட்ட பாலங்கள் கட்டுதல்.
* நகரப் பகுதிகளில் அமைந்துள்ள மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளில் ரூ.42.54 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.281.81 கோடி மதிப்பில் சிறப்பு முன்னேற்ற பணிகள்.
* மதுரை நகரத்தில் கோரிபாளையம் சந்திப்பில் சாலை மேம்பாலம் ரூ.199.12 கோடி மதிப்பிலும், வைகை ஆற்றின் வடகரை சாலை ரூ.95.94 கோடி மதிப்பிலும், கோயம்புத்தூர் நகரத்திற்கு மேற்கு சுற்றுச்சாலை ரூ.250 கோடி மதிப்பிலும், 20 சுற்றுலா மேம்பாடு பணிகள் ரூ.100.35 கோடி மதிப்பிலும், கன்னியாகுமாரி மாவட்டத்தில் கடலரிப்பு தடுப்புச்சுவர் பணி ரூ.41 கோடி மதிப்பிலும் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
* சென்னையில் 4 நடைமேம்பாலங்கள் ரூ.58.14 கோடி மதிப்பிலும், கிழக்கு கடற்கரை சாலை ஆறுவழித்தடமாக அகலப்படுத்தும் பணி ரூ.126.95 கோடி மதிப்பிலும், சென்னை உள்வட்ட சாலையில் தற்போதுள்ள ரயில்வே மேம்பாலத்தினை இரு ஐந்து வழித்தடமாக அகலப்படுத்தும் பணி ரூ.139.17 கோடி மதிப்பிலும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
* 532 சாலைப்பாதுகாப்பு பணிகள் ரூ.191.37 கோடி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

Tags : Tamil Nadu Highway Department , Tamil Nadu Highway Department, 2022 achievements, officials information
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் தவறாமல்...