×

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு: 555 காசாக என்இசிசி நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1100 கோழிப்பண்ணைகளில், 7 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகிறது. தினமும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு, வாரம் 3 கோடி முட்டைகள் அனுப்பப்படுகிறது. தமிழகம் மற்றும் கேரளா, வடமாநிலங்களுக்கு நாமக்கல் முட்டைகள் செல்கிறது. கோழிப்பண்ணைகளில் உற்பத்தியாகும் முட்டைகளில் 52 கிராம் கொண்ட பெரிய முட்டைக்கு, என்இசிசி வாரம் 3 முறை விலை நிர்ணயம் செய்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 550 காசாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று, என்இசிசி மண்டல சேர்மன் டாக்டர் செல்வராஜ், 5 காசுகள் உயர்த்தி ஒரு முட்டையின்  விலை 555 காசாக நிர்ணயம் செய்துள்ளார். கடந்த 40 ஆண்டு கால கோழிப்பண்ணை வரலாற்றில், இதுவே அதிகபட்ச முட்டை விலையாகும். இதற்கு முன் 2 முறை முட்டையின் அதிகபட்ச விலை 550 காசாக இருந்துள்ளது.

இதுகுறித்து என்இசிசி நிர்வாகிகள் கூறுகையில், ‘வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் அங்கு முட்டை தேவை அதிகரித்துள்ளது. இதையொட்டி அனைத்து மண்டலங்களிலும், முட்டையின் விலை உயர்ந்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது.

முட்டையின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் வாரங்களில் முட்டை விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது நாமக்கல் மண்டலத்தில், முட்டையின் உற்பத்தி செலவு ஒரு முட்டைக்கு 475 முதல் 480 காசுகள் வரை ஆகிறது. எனவே, முட்டை விலை தொடர்ந்து உயர்ந்தால் தான் கோழிப்பண்ணை தொழிலை பண்ணையாளர்கள் லாபகரமாக செய்ய முடியும்,’ என்றனர்.  முட்டையின் சில்லறை விற்பனை விலை ரூ.6.50 ஆக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Namakkal ,NECC , Namakkal, egg price, fixed at 555 paise by NECC
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...