×

ஹேக்கர்கள் கைவரிசை: டிஐபிஆர் டிவிட்டர் பக்கம் முடக்கம்

சென்னை: தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை வெளியிடும் தமிழக செய்தி தொடர்பு துறையின் டிவிட்டர் பக்கம் (TN DIPR) ஹேக்கர்களால் முடக்கப்பட்டு கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்கள் இடம்பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அண்மையில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் கே.என்.நேரு ஆகியோரின் டிவிட்டர் கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டது.  

இந்நிலையில், டிச.31ம் தேதி இரவு தமிழக அரசின் செய்தி தொடர்பு துறையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கான டிஐபிஆர் (TN DIPR) ஹேக் செய்யப்பட்டது. கடைசியாக மாலை 6 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிக்கை பதிவிடப்பட்டது. அதன் பின்னர் நள்ளிரவு 1.30 மணிமுதல் கிரிப்டோ கரன்சி விளம்பரங்கள் இடம்பெற்றன. இதைக்கண்ட அப்பக்கத்தை பின்தொடர்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அரசு அதிகாரிகள் உடனடியாக டிவிட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்தனர். ஹேக் செய்யப்பட்ட பக்கத்தை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் காரணமாக, ஜன.1ம் தேதி (நேற்று) மதியம் டிஐபிஆர் பக்கம் மீட்கப்பட்டு கிரிப்டோ கரன்சி விளம்பரங்கள் நீக்கப்பட்டு மீண்டும் அரசு சார்ந்த பதிவுகள் மற்றும் செய்திகள் பகிரப்பட்டு வருகிறது. அரசு சார்ந்த சமூக வலைத்தளங்கள் இதுபோன்று தொடர்ந்து ஹேக் செய்யப்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Twitter , Hackers hand in hand, DIPR twitter page disabled,
× RELATED ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் டிவிட்டர் கணக்கு முடக்கம்