திருமலை: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆங்கில புத்தாண்டு, பொங்கல் முன்னிட்டு ஏழை பெண்களுக்கு கைத்தறி புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
இதில், கலந்து கொண்ட தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, சில பெண்களுக்கு மட்டும் புடவைகளை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் புடவைகளை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பெண்கள் அங்கு குவிந்தனர். சந்திரபாபு சென்ற பின் அக்கட்சித் தலைவர்கள் பெண்களுக்கு புடவைகளை வழங்கி கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும், படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த 29ம் தேதி நெல்லூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்ட கட்சி நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கால்வாயில் விழுந்து 8 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் நடந்த சில தினங்களிலேயே குண்டூரில் நேற்று சந்திரபாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 பெண்கள் இறந்த சம்பவம் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
