×

கடந்த மாதம் மழையால் பாதிப்பு வேதாரண்யத்தில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி துவக்கம்: தொழிலாளர்கள் மும்முரம்

வேதாரண்யம்: மழை ஓய்ந்ததால் வேதாரண்யத்தில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி துவங்கி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. சிறு உப்பு உற்பத்தியாளர்கள் 850 பேர், 3 ஆயிரம் ஏக்கரில் உணவு உப்பு தயார் செய்து வருகின்றனர். மீதம் உள்ள 6 ஆயிரம் ஏக்கரில் கோடியக்காடு, கடினல்வயல் பகுதியில் தொழிற்சாலைக்கு தேவையான உப்பை பெரிய நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றனர்.

ஆண்டு தோறும் இங்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் விட்டு விட்டு மழை பெய்ததால் பாத்திகளில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது. தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர் வேலை இழந்தனர்.

தற்போது வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மீண்டும் உப்பு உற்பத்திக்கான பாத்தி அமைக்கும் பணிகள் முழு வீச்சில் துவங்கியுள்ளது. கடந்தாண்டு மழை காரணமாக உப்பிற்கு நல்ல விலை இருந்தும் உற்பத்தி இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டுக்கான உப்பு உற்பத்தி இலக்கை எட்டுவதற்கு இரவு பகலாக முழுவீச்சில் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

அதேசமயம் கடந்த ஆண்டு போல உப்பு பாத்திகளை சரி செய்வதற்கு மண் அடிக்க முடியாத நிலையில் உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். பாத்திகளில் உள்ள மணலையே புதிதாக உருவாக்கப்படும் பாத்திகளுக்கு போட்டு சரி செய்கின்றனர். இதனால் உப்பு வெள்ளையாக இருக்காது என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர். உப்பளங்களுக்காவது மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Vedarany , Damage from rain, weather, initiation of salt production,
× RELATED பகலில் வெயில் கொளுத்துகிறது;...