திருடன் என நினைத்து தொழிலாளி அடித்துக்கொலை: திருப்பூர் போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூரில் திருடன் என நினைத்து கட்டிடத் தொழிலாளியை சரமாரியாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகரை சேர்ந்தவர் முத்துசெல்வம் (35). இவர் திருப்பூர் கோம்பக்காட்டுப்புதூரில் உள்ள வீட்டில் நண்பர்களுடன் தங்கியிருந்து கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது அவரை மர்மநபர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து முத்துசெல்வம் செல்போன் மூலம் நண்பர்களை தொடர்பு கொண்டு, தன்னை சிலர் தாக்குவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து நண்பர்கள்  சென்று பார்த்தனர். அப்போது முத்துசெல்வம் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு சோமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், முத்துசெல்வம் அதிகாலை நேரத்தில் வீட்டின் அருகே உள்ள விசைத்தறிக்கூட பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு பணியாற்றியவர்கள் அவரை திருடன் என நினைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசைத்தறி உரிமையாளரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: