×

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 6 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

சென்னை: சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 6 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரை வழங்க குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 6 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் பள்ளிக்கல்வி துறை செயலாளர் மற்றும் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி போராடி வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக நிதித்துறை செயலாளரின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும்.

இந்த குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து இந்த கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையடுத்து சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 6 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Tags : Intermediate Teachers ,Chennai , The hunger strike of secondary school teachers in Chennai for the past 6 days has been called off
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...