×

வைகுண்ட ஏகாதசி விழா; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு: மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல்பத்து உற்சவத்தின் நிறைவு நாளான இன்று (1ம்தேதி) காலை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை (2ம் தேதி) அதிகாலை நடைபெறுகிறது.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. தற்போது பகல் பத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை (2ம் தேதி) அதிகாலை 4.45 மணிக்கு நடக்கிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படாததால், கடந்த சில ஆண்டுகளாக சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு பக்தர்கள் அதிக அளவில் வரவில்லை. இதனால் நாளை நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் நம்பெருமாளை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பகல்பத்து விழாவின் கடைசி நாளான இன்று (1ம் தேதி) காலை 6 மணிக்கு மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதையொட்டி காலை 6 மணிக்கு நம்பெருமாள் நாச்சியார் கோலத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் காட்சியளித்தார்.

அங்கு பொதுஜன சேவை முடிந்தவுடன் மாலை 5மணிக்கு புறப்பட்டு  5.30 மணிக்கு ஆரியபட்டாள் வாயில் வந்தடைகிறார். இரவு 7 மணிக்கு திருக்கொட்டார பிரகாரம் வழியாக வலம் வந்து கருட மண்டபம் சேர்கிறார். இரவு 8.30 மணிக்கு ஆழ்வாராதிகள் மரியாதையாகி கருடமண்டபத்திலிருந்து புறப்பாடாகி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் அடைகிறார்.  மோகினி அலங்காரத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (திங்கட்கிழமை) காலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. இதற்காக உற்சவர் நம்பெருமாள் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து நாளை அதிகாலை 3.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில் புறப்பட்டு வெளியில் வருவார்.

தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக மூன்றாம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார். முன்னதாக விரஜாநதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்டருளுவார். அதனைத் தொடர்ந்து காலை 4.45 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு காலை 5 மணிக்கு வருவார்.

அங்கு நம்பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அதன்பின் காலை 7 மணிக்கு சாதரா மரியாதையாகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் காலை 8 மணிக்கு எழுந்தருளுவார். காலை 9 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை பொதுஜன சேவையும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அரையர் சேவையுடன், பொது ஜனசேவையும் நடைபெறும். திருமாமணிமண்டபத்தில் இருந்து நம்பெருமாள் நள்ளிரவு 12 மணியளவில் புறப்பட்டு மறுநாள் (3ம் தேதி) அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைவார்.

விழாவையொட்டி ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு நாளை (2ம் தேதி) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் எல்லா வைணவத் திருத்தலங்களிலும் நாளை சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.

Tags : Vaikunta Ekadasi Festival ,Sriranangam Ranganadar Temple , Vaikunda Ekadasi Festival; Srirangam Ranganatha Temple Opening of Heaven Door Tomorrow: Namperumal in Mohini Akaraman
× RELATED ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தின் 20 அடி...