×

கேரள மாநிலம் வயநாடு அருகே காலில் காயத்துடன் சுற்றி திரிந்த பெண் புலி சாவு

கூடலூர்: கேரள மாநிலம் வயநாடு அருகே காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த பெண் புலி உயிரிழந்தது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பத்தேரி தாலுகா பூதாடி பேரூராட்சி பகுதியில் உள்ளது வாகேரி கிராமம். இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக விவசாயிகளின், ஆடுகளை புலி ஒன்று தாக்கி வேட்டையாடி வந்தது. இதனால், மக்கள் அச்சமடைந்தனர். ஆடுகளை வேட்டையாடும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து, வனத்துறை சார்பில் புலியை மயக்க ஊசி போட்டு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே, காபி தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள், புலி ஒன்று காலில் ஊனத்துடன் நடப்பதை பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, கால்நடை மருத்துவர் அருண் சக்கரியா, தலைமையிலான குழுவினர் கடந்த 2 நாட்களாக புலியை மயக்க ஊசி போட்டு பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை இங்குள்ள காபி தோட்டத்தை ஒட்டிய புதர் பகுதியில் பெண் புலி ஒன்று இறந்து கிடப்பது குறித்து வனத்துறைக்கு மீண்டும் கிராம மக்கள் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர், அப்பகுதியில் இறந்து கிடந்தது ஆடுகளை வேட்டையாடியது பெண் புலி என்பதை உறுதிப்படுத்தினர்.

அதன்பின், புலிக்கு வலது காலில் ஏற்பட்ட காயம் பெரியதாகி புழுக்கள் நெளிந்ததை பார்த்தனர். இதனை அடுத்து புலியின் உடலை உடற்கூராய்வு செய்து அதன் முக்கிய உறுப்புகளை ரசாயன பரிசோதனைக்காக சேகரித்து, உடலை அப்பகுதியில் எரியூட்டினர்.

இறந்தது 6 வயது மதிக்கதக்க பெண் புலி என்றும், காலில் ஏற்பட்ட காயம் பெரிதாகி வேட்டையாட முடியாத நிலையில் உடல் சோர்ந்து இறந்து இருக்கலாம் என்றும், காயம் ஏற்பட்டதற்கான காரணம்  குறித்து ரசாயன பரிசோதனை முடிவுக்கு பின்னரே கூற முடியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Wayanad ,Kerala , A female tiger has died near Wayanad in Kerala state with an injured leg
× RELATED வயநாட்டில் ராகுல் ஏப்ரல் 3ம் தேதி வேட்பு மனு தாக்கல்