×

2 மாதத்துக்கு பிறகு வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி துவக்கம்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் பகுதிகளில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடந்து வருகிறது. சிறு உப்பு உற்பத்தியாளர்கள் 850 பேர், 3000 ஏக்கரில் உணவு உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். மீதமுள்ள 6,000 ஏக்கரில் கோடியக்காடு, கடினல்வயல் பகுதியில் தொழிற்சாலைக்கு தேவையான உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
    
வேதாரண்யத்தில் ஆண்டுதோறும் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்ததால் உப்பளங்களில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டதுடன் உப்பள தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்து வீட்டில் இருந்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் உப்பள பாத்திகள் சரி செய்யப்பட்டு உப்பு உற்பத்திக்கான முதல்கட்ட பணிகளான பாத்தி அமைத்தல் பணிகள் முழுவீச்சில் துவங்கியுள்ளது. கடந்தாண்டு ஜனவரியில் மழை பெய்து வந்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. சென்றாண்டு உப்புக்கு நல்ல விலை இருந்தும் உற்பத்தி இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் நடப்பாண்டில் (2023) உப்பு உற்பத்தி இலக்கை எட்டுவதற்கு இரவு பகல் பாராமல் உப்பள பகுதிகளில் முழுவீச்சில் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்தாண்டு உப்புள பகுதியில் கடந்தாண்டு போல உப்பு பாத்திகளை சரி செய்வதற்கு மண் அடிக்க முடியாத நிலையில் உற்பத்தியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே உப்பளங்களுக்கு மட்டுமாவது மண் எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டுமென உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Vedaranyam , After 2 months salt production started at Vedaranyam
× RELATED வேதை அருகே பாஜ அலுவலகம் திறப்பு:...